"ஒரே டார்ச்சர்.. ஓரளவுக்கு தான் பொறுமை.." இன்று மழை பெய்யுமா! தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெய்யும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. நீர்நிலைகளும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வழக்கமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. இது நேற்றைய தினம் காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 400 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இது மிக மெதுவாக நகர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

எங்கு மழை
இதற்கிடையே நேற்றிரவு சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதேநேரம் புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்தது. இன்றைய தினமும் மழை இருக்கும் என வானிலை மையம் கூறி இருந்தது. இந்தச் சூழலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

தள்ளி நிற்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சென்னையின் வட தமிழக கடற்கரையில் இருந்து தள்ளி உள்ளது. இன்னும் அது மெதுவாகவே நகர்ந்து வருகிறது. எலும்புக்கூட்டைப் போல 3 பக்கங்களிலும் மேகங்கள் இல்லாமல் வெட்டப்பட்டும் கிழிந்ததும் இருக்கிறது.. மற்றொரு பக்கம் அடர்ந்த மேகங்களைக் கொண்டு உள்ளது. இவை மெதுவாகக் கடற்கரைக்கு அருகில் நகர்கிறது.

டார்ச்சர்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நமக்கே மனச்சோர்வைத் தருகிறது. கடந்த 4 நாள் டார்ச்சரில் முதன்முறையாக இவ்வளவு அடர்த்தியான மேகங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளது. இப்போது இருக்கும் பெரிய கேள்வி ஒன்று தான். சூரியனின் நேரம் வந்துவிட்டது.. இனிமேல் இந்த பெரிய மேகங்கள் என்ன தான் செய்யப் போகிறது. நிலத்திற்கு அருகே வந்து மழையைத் தருமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஓரளவுக்குத் தான் பொறுமை
இதற்கு நெட்டின்சன் ஒருவர் நீங்கள் இப்படிச் சொன்னால் என்ன சார் என விளையாட்டாகக் கேட்டார். அதற்குப் பதிலளித்துள்ள பிரதீப் ஜான், "எனக்கும் மனச்சோர்வாகவே உள்ளது. ஒரு அளவுக்குத் தான் பொறுமையாக இருக்க முடியும். அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எத்தனை நாட்கள் தான் கடலிலேயே இருக்க முடியும். ஒன்று மழை வர வேண்டும். இல்லையென்றால் சூரியன் வர வேண்டும்" என்றும் பதிலளித்து உள்ளார்.

வானிலை மையம்
இன்றைய தினம் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
அதேபோல நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications