அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிக்கல்.. வீடு விற்பனையே முடங்கும் அபாயம்: பதிவுக்கட்டண உயர்வு வாபஸ்?
சென்னை: பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், அவைகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடிக்க துவங்கி உள்ளன.
பத்திரப்பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்துவரும்நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம், 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்று இன்னொரு அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.

அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
கட்டாய சான்றிதழ்: வழக்கமாக, தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.
இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.. இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்..
கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும்... ஒருபக்கம் வழிகாட்டி மதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம் பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியையே தருவதாக பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
அரசுக்கு கோரிக்கை: இது தொடர்பாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான "கிரெடாய்" சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் அரசுக்கு கோரிக்கை ஒன்றை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "அடுக்குமாடி திட்டங்களில், வீடு விற்பனை பதிவில், ஒட்டு மொத்த மதிப்புக்கு, 9 சதவீத தொகையை செலுத்த வேண்டும் என்பது, வீடு வாங்குவோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.. பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் வீடுகள் விஷயத்தில், இது, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை அரசு உணர்ந்து, இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்று அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்பார்ப்பு: தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் போலி பத்திர சேவைகளை தடுக்கும் விதமாக அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்ந்துள்ள நிலையில், பதிவுக் கட்டணமும் 2 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதிருப்தியையே ஏற்படுத்தி வருகிறதாம். எனவே, பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாலாபுறமும் வெடித்து கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications