அடுத்த ஒலிம்பிக்கில் இதே வாளை வைத்து வெல்லுங்கள்: பவானிதேவியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்டாலின்
சென்னை: வாள் வீச்சு பிரிவில் இந்தியாவிலேயே முதல் பெண்மணியாக சென்ற தமிழக வீராங்கனை பவானிதேவி ஒலிம்பிக் போட்டி முடிந்த நிலையில் முதல்வரை சந்தித்து ஆசிப்பெற்ற அவர் தனது வாளை பரிசளிக்க அதை அடுத்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற பயன்படுத்துங்கள் என வாழ்த்தி திரும்ப அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்
ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. இதில் 140 கோடியை நெருங்கும் இந்தியா சார்பில் கலந்துக்கொள்ள இயலாத பல போட்டிகள் உள்ளன. அதில் ஒன்று வாள் வீச்சு போட்டி. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வாள் சண்டைக்கு பேர்போனவர்கள் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள். ஆனால் விளையாட்டுப்போட்டியில் வாள்வீச்சுக்கென உரிய இடத்தை பிடிக்க முடியவில்லை.

கடினமான பயிற்சி முறை
இதற்கு முக்கிய காரணம் சாதாரணமாக இப்போட்டியில் பயிற்சி எடுக்க முடியாது. உரிய போட்டியாளர், உரிய பாதுகாப்பு உடைகள், வாள் உள்ளிட்டவை இருக்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் வாள் பயிற்சி போட்டியில் தலையுடன் சேர்ந்து முகத்தை காக்கும் கவசம் அணியாத மாணவன் கண்ணில் கத்தி பாய்ந்து பலியான சோக சம்பவம் நடந்தது.
ஆகவே மிகவும் ஜாக்கிரதையாகவும், உரிய பயிற்சியாளரையும் கொண்டு விளையாடப்படும் இந்த போட்டிக்கு ஆகும் செலவு, பயிற்சிக்கான இடம் இல்லாததால் யாரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அதில் பயிற்சிப்பெற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இன்று ஒலிம்பிக்கிலும் முதல் பெண்மணி என்கிற பெருமையுடன் பங்கேற்றுள்ளார் பவானி தேவி.

தமிழக வீராங்கனை பவானி தேவி
இதில் பெருமைக்குரிய விஷயம் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் அதையும் தாண்டி நம்மவடசென்னையின் சாதாரண குடிமகள். பவானி தேவி இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒட்டு மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். அப்போதே "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதுதான் தன்னுடைய இலக்கு" என்றார் பவானி தேவி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தற்போது நிகழ்த்தியும்காட்டியுள்ளார்.

வடசென்னை வாள்வீச்சு வீராங்கனை
இவர் தண்டையார்பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் படித்தபோது பள்ளியில் புதிதாக வாள் வீச்சு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பவானி தேவி ஆர்வமுடன் அந்தப்போட்டியில் தன்னை இணைத்துக்கொண்டார். அது பவானிதேவியின் வாழ்க்கையையே மாற்றியது.
பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் பல வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார். அவரது திறமையைப்பார்த்து கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இங்குதான் அவர் ஒலிம்பிக்கில் பங்குபெற அடித்தளமாக இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளர் சாகர் சுரேஷ் லாகுவின் பயிற்சி கிடைத்தது. முதல் சர்வதேச வெற்றி என்றால் மலேஷியாவில் நடந்த காமென்வெல்த் போட்டியில் கிடைத்த வெண்கலப்பதக்கம் தான்.

100 இடங்களுக்குள் முன்னேற்றம்
இந்தியாவில் வாள் வீச்சு வீராங்கனைகள் பலரும் 145 இடங்களுக்கு மேல் இருந்த நிலையில் 93 வது இடத்துக்கு சிறிய வயதிலேயே முன்னேறி 100 இடங்களுக்குள் பங்குபெறும் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார் பவானிதேவி.
தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்ற பவானி தேவி 2014-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தார்.

உலக தர பயிற்சி
அதன் பின்னர் பவானியின் வாள் வீச்சு மெருகேற வாய்ப்பாக அமைந்தது அவருக்கு உலக தர அளவிலான பயிற்சி கிடைத்ததே. உலகப் புகழ்ப்பெற்ற பயிற்சியாளர்களான அமெரிக்காவின் எட்வார்ட் கோர்ஃபெண்டி, இத்தாலியின் நிக்கோலோ சனோட்டி ஆகியோரின் பயிற்சி கிடைத்ததுதான்.
இந்நிலையில் பல வெற்றிகளை குவித்ததன் மூலம் உலக அளவில் 45 ஆவது இடத்திற்கு முன்னேறிய பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார். இந்தியாவிலிருந்து வாள் வீச்சுக்கு செல்லும் முதல் வீராங்கனை எனும் பெருமை பெற்றதால் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நேரடி வாழ்த்தைப்பெற்றார்.
Recommended Video

முதல்வர் உதவி
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை வாழ்த்தி தமிழகம் சார்பில் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். ஒலிம்பிக் போட்டியின் முதல் போட்டியே அவருக்கு கடினமான போட்டியாக இருந்தது. போட்டியில் அவர் வெல்லாவிட்டாலும் அது அவருக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.
இந்த வாளை வைத்து வெல்லுங்கள்
போட்டிக்குப்பின் சென்னை திரும்பிய பவானிதேவி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றார். அப்போது அவர் தான் பயன்படுத்திய வாளை முதல்வருக்கு பரிசாக அளித்தார். அந்த வாளை வெற்றி வாளாக அடுத்த ஒலிம்பிக்கில் பயன்படுத்தி வெல்லவேண்டும் என ஆசிக்கூறி திருப்பி பரிசாக அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
நெகிழ்ச்சியுடன் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"ஒலிம்பிக் போட்டியில் தேர்வான எனக்கு உரிய உதவி செய்வதாகவும், என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக முதல்வர் நம்பிக்கை அளித்திருந்தார். என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி, அதுவுமல்லாமல் இந்தியாவிலிருந்து முதல் வீராங்கனையாக சென்றுள்ளேன். அது எனக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
முதல்வரை இன்று சந்தித்தபோது எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எனது தாயாரை முதல்வர் பாராட்டினார். முதல்வருக்கு எனது வாளை பரிசாக கொடுக்க முடிவு செய்திருந்தேன். இந்தியாவிலிருந்து முதன் முதலாக வாள் வீச்சுக்காக பயன்படுத்திய வாள் என்பதால் அவருக்கு பரிசளிக்க முடிவு செய்து வாளை கொடுத்தேன்.
இல்லை நீங்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் அதற்கு இந்த வாள் பயன்படட்டும் என்று எனக்கே அதை பரிசாக திருப்பிக்கொடுத்தார். இன்னும் நீங்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் அதற்கான அனைத்து உதவியும் செய்வோம் என்று தெரிவித்தார்.
நான் மின் வாரியத்தில் பணியாற்றுவதால் அந்தப்பணியைப்பற்றி விசாரித்தார். விளையாட்டு அமைச்சரும் என்னை பாராட்டினார். நான் இந்த அளவுக்கு ஒலிம்பிக் போட்டிவரை செல்ல முக்கியமான பங்கு தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதி உதவிதான் காரணம்.
அந்த உதவி தொடரும் என்று நம்புகிறேன், அது கிடைத்தால் இன்னும் பல மெடல்களை நாட்டுக்காக பெற்றுத்தருவேன். ஒலிம்பிக்கில் செல்பவர்களுக்கு பதவி உயர்வு இருக்கும், அது எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். மத்திய அரசுப்பணியில் அழைப்பு வந்தது, ஆனால் தமிழக பணியில் இருக்கவேண்டும் என்பதற்காக நான் இங்கு பணியாற்ற விரும்புகிறேன்"
இவ்வாறு பவானிதேவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications