சிறு வணிகர்கள் மீதான தாக்குதல்.. சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெறணும்.. உதயநிதி வலியுறுத்தல்
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வை உடனே ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்படும். அதன்படி அக்டோபர் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு வெளியானது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்துது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ஒரேயடியாக ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கான விலை மீண்டும் உயர்ந்து உள்ளதால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றில் இந்த கேஸ் சிலிண்டரையே பயன்படுத்துவதால், அவர்களுக்கு பெரும் அடியாக இது உள்ளது.
இதனால், உணவு பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால், சிறு வணிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications