"படையப்பா".. சிவாஜி கணேசனை போல் சென்னையில் பெண்ணுக்கு பிரிந்த உயிர்.. என்ன நடந்தது? பெரும் சோகம்
சென்னை: சென்னையில் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்த அதிர்ச்சியில் மூதாட்டி ஒருவர் இறந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‛படையப்பா' படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் உயிர் பிரிந்ததுபோல் அவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‛படையப்பா'.. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தந்தையாக நடிகர் சிவாஜி கணேசன் நடித்து இருப்பார். இந்த திரைப்படத்தில் ஒரு சீன் இடம் பெற்றிருக்கும்.

அதாவது தம்பி மணிவண்ணன், அண்ணன் சிவாஜி கணேசனிடம் சண்டையிட்டு சொத்துகளை பிரித்து கேட்பார். அப்போது சிவாஜி கணேசன் உணர்ச்சிப்பூர்வமாக வசனங்களை பேசுவதை நாம் மறந்து இருக்க மாட்டோம்.
அதோடு சொத்துகளை பிரிக்க வேண்டாம் எல்லா சொத்துகளையும் என் தம்பியே வைத்து கொள்ளட்டும் எனக்கூறி கண்கள் கலங்கி சிவாஜி கணேசன் தனது மகன் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் பங்களாவை விட்டு வெளியேறுவார். பங்களாவை விட்டு வெளியேறியதும், சிவாஜி கணேசன், ‛‛நான் வாழ்ந்த இந்த வீட்டில் கடைசியா ஒருமுறை உட்கார்ந்து விட்டு வரேன்' என்று சொல்லிக்கொண்டு வீட்டு தூணை கட்டிப்பிடித்து கொள்வார். அப்போது அவரது உயிர் பிரியும். இந்த காட்சி இன்று வரை நம் அனைவரையும் கண்கலங்க வைத்து வருகிறது.
சிவாஜி கணேசனின் உயிர் பிரிய முக்கிய காரணம் என்பது காலம் காலமாக வாழ்ந்த பங்களா கையை விட்டு போகிறதே? தம்பிக்கு விட்டு கொடுத்தாலும் கூட இனி நம்மால் இந்த பங்களாவுக்குள் வர முடியாதே என்ற ஏக்கமும், இன்னொரு தாய்க்கு பிறந்திருந்தாலும் சொந்த தம்பி போல் வளர்த்தோமே.. அவன் இப்படி செய்துவிட்டானே என்ற வலியும், வேதனையும் தான் முக்கிய காரணம். உண்மையில் ஒருவருக்கு பார்த்து பார்த்து கட்டிய வீடு, பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீடு கையை விட்டு போகும்போது மனதில் பெரும் கவலை வருவது இயல்பு தானே. அதனை தான் இந்த காட்சி நம் கண்முன்பு நிறுத்தி இருக்கும்.
ஆனால் இப்போது படையப்பா பட நடிகர் சிவாஜி கணேசனுக்கு நேர்ந்த சோகம் சென்னையில் மூதாட்டி ஒருவருக்கு நடந்துள்ளது. அதாவது சென்னை நொளம்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முகப்பேர் அருகே எபினேசர் அவென்யூ என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் இன்பராஜ். இவரது தாய் பெயர் கீதா. இன்பராஜ் கடந்த 2017ம் ஆண்டு வங்கி ஒன்றில் ரூ.1 கோடி வரை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய பிறகு அவர் அதற்கான வட்டி மற்றும் அசலை செலுத்தி வந்தார். ஆனால் அதன்பிறகு கடனுக்கான மாததவணையை அவர் சரியாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடனுக்கான தவணையை திரும்ப செலுத்தும்படி பலமுறை வங்கி சார்பில் அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் இன்பராஜால் அந்த பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி சார்பில் அவரது வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. தான் வசிக்கும் வீட்டின் பெயரில் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். இதனால் வங்கி நிர்வாகம் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கை என்பது தொடங்கியது. இதுபற்றி அறிந்த இன்பராஜின் தாய் கீதா திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்தால் அதில் நுழைய முடியாதே. அக்கம்பக்கத்தினர் என்ன பேசுவார்கள்? என்று மனம் உடைந்த கீதா அதிர்ச்சியில் உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நொளம்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படையப்பா படத்தில் தம்பி மணிவண்ணன் சொத்தை பறித்ததால் நடிகர் சிவாஜி கணேசனின் உயிர் என்பது பிரியும். இந்த சம்பவத்தில் வீட்டை வங்கி அதிகாரிகள் கைப்பற்ற நடவடிக்கை எடுத்ததால் கீதாவின் உயிர் பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்றாலும் கூட இருவரின் வலியும், வேதனையும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications