எதே.. வள்ளலார் சனாதனவாதியா? பொய், பித்தலாட்டம்.. ஆளுநர் ரவிக்கு சைவ பேரவை கலையரசி நடராசன் கண்டனம்
சென்னை: வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்கு சைவப் பேரவை நிறுவனரான ஆன்மீகவாதி கலையரசி நடராசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகவாதி கலையரசி நடராசன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வள்ளலாருக்கும் சனாதன தர்மத்துக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். பாமரர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களுடைய சனாதன தர்மத்தை, ஆரியத்தை, பிராமணியத்தை எப்படியாவது தமிழ்நாட்டில் வேரூன்றி விழுதுவிட செய்துவிட வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்ய முடியுமோ, பேச முடியுமோ அதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இங்குள்ள தமிழர்களிலேயே 5-ம் படையாக புல்லுருவிகளாக தமிழர்களுக்கு அவமானத்தை தேடி வைப்பதற்காக காலம் முழுவதும் பிராமணர்களால் தோற்றுவிக்கப்படும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டம்தான் ஆளுநர் ரவியை அழைத்துக் கொண்டு போய எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது.
சனாதனத்துக்கு என்ன தொடர்பு?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வள்ளலாரைப் பற்றி என்னதான் தெரியும்? தமிழில் பாடாத, பேசாதவர்கள் இறைவனை சேரவே முடியாது என வள்ளலார் பாடி இருக்கிறார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் பாடியதற்கும் சனாதனத்துக்கும் என்னதான் தொடர்பு? சனாதன தர்மத்துக்குள் வராதவனை கொலை செய்கிறவன் ஆரியன். சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவனை கொன்றுவிடுகிறான் ஆரியன். அசோகனின் பேரனை கொன்றுவிட்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்தவன் புஷ்யமித்திரன் அல்லவா? அந்த வழிவந்தவர்கள்தானே இவர்கள்?
மயக்க முடியாது: வள்ளலாரைப் பற்றி பேசினால்தான் தமிழ்நாட்டு மக்களை மயக்க முடியும் என்ற எண்ணம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இருக்கிறது. ஜாதி கிடையாது; மதம் கிடையாது; ஆச்சாரம் கிடையாது என்ற வள்ளலாரா சனாதன தர்மத்தை ஏற்றவர்? சனாதன தர்மத்துக்கும் வள்ளலாருக்கும் எந்த வகையிலும் ஒட்டுறவே கிடையாதே.. தமிழ் மண்ணில் பிறந்த அத்தனை மகான்களையும் சனாதனத்துக்குள் கொண்டு பொய் நிறுத்தி இந்து என முத்திரை குத்த பார்க்கின்றனர். வள்ளலார் காலத்தில் தமிழ் தூய்மையான நடையில் இல்லை. அதனால் அவரது அருட்பாவில் சில வடமொழிச் சொற்களை சேர்த்து எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள சைவ சித்தாந்த மடங்களே இன்று வரை வள்ளலாரை ஏற்கவில்லையே? ஏனெனில் ஜாதி இல்லை- மதம் இல்லை என பேசியவர் வள்ளலார். ஆனால் ஆளுநர் ரவியோ, வள்ளலாரை சனாதனத்துக்குள் திணிக்கப் பார்க்கிறார்.
எது சனாதனம்? : சனாதனம் என்பது முதலில் பெண்களுக்கு எதிரானது. சனாதனம் பெண் தெய்வத்தை முன்னிறுத்தி அனைத்தும் செய்யும்.. ஆனால் வாழ்வியலில் பெண்களுக்கு எந்த ஒரு உரிமையையும் சனாதனம் தராது. அடுத்து ஜாதியம், அடுத்து மத உணர்வு. மதம் இல்லாமல் இறைவனே இல்லை என்பது சனாதனம். சனாதனத்தில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு எல்லாமும் உண்டு. ஆனால் சனாதனவாதிகள் வெளியே ஒரு போர்வை வைத்துள்ளனர். அதில் எல்லோரும் சமம் என்பார்கள். அதெல்லாம் சனாதனத்தில் நடைமுறையில் கிடையவே கிடையாது. அவர்களது உள்ளுணர்வில் ஊறி கிடக்கும் சனாதன உணர்வே வேறு. வெளியில் பேசக் கூடிய சனாதனத்தை நடைமுறையில் கடைபிடிக்கமாட்டார்கள். மனுவினால் உருவாக்கப்பட்டது சனாதனம். மனு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதைத்தான் சனாதனவாதிகள் கடைபிடிக்கின்றனர். அந்த சனாதனத்துக்கு தமிழர்களுக்கும் தொடர்பு கிடையாது. சனாதனத்துக்கும் வள்ளுவனுக்கும் தொடர்பு கிடையாது. சனாதனத்துக்கும் கம்பனுக்கும் கூட தொடர்பு கிடையாது. அப்படி இருக்கையில் வள்ளலாரை சனாதனம் நெருங்கவே முடியாது. வள்ளலார் ஜோதி வடிவானவர். தமிழர்கள் மனு, சனாதன நெறிகளை எல்லாம் எப்பவோ நிராகரித்துவிட்டனர். இவ்வாறு கலையரசி நடராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications