ஜாய் கிரிஸில்டா புகார்! மாதம்பட்டி ரங்கராஜ் கைதாகிறாரா? காவல் துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்!
சென்னை: சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுங்கள் என மகளிர் ஆணையம், சென்னை காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. அது போல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் மகளிர் ஆணையம் இருவரிடமும் விசாரணை நடத்தியது.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார்.
அந்த புகாரில், "ரங்கராஜ் என்பவர் எனது கணவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார்.
நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது என்னை அடித்து விரட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூகவலைதள பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார் தொடர்பாக கடந்த மாதம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கும் மணிக்கணக்கில் விளக்கம் அளித்தார்.
அது போல் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கு பார்த்துக் கொள்கிறேன் என காவல் துறையினரிடம் ரங்கராஜ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி தொடர்பாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதால் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த புகாரில் , மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாய் குறிப்பிட்டுள்ளார். தனது வழக்கறிஞர் சுதாவுடன் மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஜாய் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தனக்கும் குழந்தைக்கும் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ 6.50 லட்சம் தர வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. குழந்தையை அப்படியே தந்தை மாதம்பட்டி ரங்கராஜை உரித்து வைத்திருப்பதாக ஒரு புகைப்படத்தை ஜாய் வெளியிட்டிருந்தார். குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் கூட மாதம்பட்டி ரங்கராஜின் பெயரை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம், காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications