“இந்த” பெண் பிரபாகரன் மகள் துவாரகாவா.. எவ்வளவு வித்தியாசம்? 200% இல்லை என்று சொல்லும் கார்ட்டூனிஸ்ட்
சென்னை: பிரபாகரன் மகள் துவாரகா என்று நேற்று இலங்கையில் உரையாற்றிய பெண், அவரது மகளே இல்லை என கார்ட்டூனிஸ்டு பாலா தெரிவித்து உள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் தேதி ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகின. யூ டியூப் சேனல் மூலமாக மாவீரர் நாளை முன்னிட்டு துவாரகா உரையாற்றுவார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறிக்கொண்டு பேசிய பெண் ஒருவரது வீடியோ ஒளிபரப்பப்பட்டது. தன்னை பிரபாகரன் மகள் துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் சுமார் 10 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் பேசுகையில், "அரசியல் வழியில் தமிழீழத்திற்காக தொடர்ந்து பயணிப்போம். சிங்களத்திற்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
நாம் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சவால்கள், ஆபத்துகளை தாண்டி நான் உங்கள் முன் தோன்றி இருக்கிறேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணி அற்றது. தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. ஐநாவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை.

தமிழீழத்துக்காக போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. இத்தனை ஆண்டுகளாக நம்மோடு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாம் சிங்கள மக்களுக்கும் எப்போதும் எதிரி இல்லை. அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை. பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று அவர் பேசி இருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பேசிய பெண் பிரபாகரனின் மகளா என்று சந்தேகம் கிளப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபாகரன் மகள் துவாரகாவின் இளம் வயது புகைப்படத்துடன் காணொலியில் தோன்றிய பெண்ணின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பலர் கருத்திட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல கார்டூனிஸ்டு பாலாவும் இரு படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

அதில், அவர் குறிப்பிடுகையில், "ஒருவேளை தலைவர் மேதகுவின் மகள்தான் இவர் எனில் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை. ஆனால், முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக ஓவியனாக சொல்கிறேன். 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications