Wonderla: "சென்னை வொண்டர்லா" பொழுதுபோக்கு பூங்கா எப்போது தொடக்கம்? என்னென்ன Rideகள் இருக்கு?
சென்னை: சென்னையில் வொண்டர்லா (WonderLa) எனும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இங்கு என்னென்ன மாதிரியான ரைடுகள் (ride) இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சென்னை வொண்டர்லா எனும் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் amusement park கள் உள்ளன. அந்த வகையில் செங்கல்பட்டில் அமையும் இந்த வொண்டர்லாவும் மக்களுக்கு விருப்பமான ஸ்பாட்டாக அமையும்.

விடுமுறை காலம், கோடை காலம், தொடர் விடுமுறை என வந்தால் போதும் இந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துவிடுகிறார்கள். இந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒரு நாளை செலவிட குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சவாரிகளுக்கும் சேர்த்துதான் அந்த கட்டணம். எனினும் சில பிரத்யேக சவாரிகளுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது.
வாட்டர் கேம்ஸ்
பொதுவாக வாட்டர் கேம்ஸ்கள் எல்லாமே அந்த கட்டணத்தில் வந்து விடும். கோடையில் வாட்டர் கேம்ஸில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வார்கள். இதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டு இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுகிறது.
எங்கெல்லாம் வொண்டர்லா
அந்த வகையில் இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான "வொண்டர்லா" ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது.
பெங்களூரில் வொண்டர்லா
இந்த பூங்கா தமிழகத்தில் இல்லை என்றாலும் பெங்களூருக்கு தமிழக இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் வொண்டர்லா அமைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டில் அமைத்து வருகிறது. இது தமிழகத்தின் முதல் வொண்டர்லா பொதுபோக்கு பூங்காவாகும்.
எத்தனை ஏக்கர்
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த இள்ளளூரில் 65 ஏக்கர் பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 510 கோடி செலவிடப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ரைடு
இங்கு உலக புகழ்பெற்ற Bolliger and Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைகிறது. இது லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரம்மாண்ட ரோலர் கோஸ்டர் செங்கல்பட்டில் அமைகிறது. இதற்கு மட்டும் 75 முதல் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.
எத்தனை சவாரிகள்
மேலும் இந்த வொண்டர்லாவில் பெரியவர்களுக்கு 42 சவாரிகள் உள்ளன. இவற்றில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 10 சவாரிகள் இருக்கும் எனவே மொத்தம் 52 சவாரிகள் இடம் பெறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி டிசம்பர் 2ஆவது வாரத்தில் இந்த பூங்கா தொடங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications