போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக?
சென்னை: உலக செஸ் அரங்கில் நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளைத் தமிழ்நாடு நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் - டி. குகேஷ் மற்றும் ஆர். வைஷாலி - இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், சென்னையில் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தமிழக செஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் இளம் நட்சத்திரம் ஜவோகிர் சிந்தாரோவை எதிர்கொள்ள உள்ளார். பெண்கள் பிரிவில் தமிழகத்தின் ஆர். வைஷாலி, சீனாவின் நடப்பு உலக சாம்பியன் ஜு வென்ஜுனை சவாலுக்கு அழைக்கிறார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும். இது இந்திய செஸ் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவாகும் நிகழ்வு.

ஆனால் இந்த வரலாற்றுப் பெருமையை தமிழக மண்ணில் கொண்டாட முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உயரதிகாரி ஒருவர், "ஏலத் தொகை மட்டும் ₹85 கோடி. மொத்த நிர்வாகச் செலவு, வீரர்கள் தங்குமிடம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் சுமார் ₹100 கோடி வரை செலவாகும். தற்போதைய சூழலில் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க அரசு தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு செஸ் சங்கம் (TNSCA) இந்தப் போட்டியை தமிழகத்திற்கு கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. TNSCA வட்டாரத்தினர் கூறுகையில், "முதலமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த உலகளாவிய செஸ் திருவிழா தமிழகத்தில் நடைபெற்றால் பெரும் பெருமை. அது நடைபெறாவிட்டால் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
குகேஷ் மற்றும் வைஷாலி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சொந்த மண்ணில் நேரில் காண தமிழக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். செஸ் அகாடமிகளில் பயிற்சி பெறும் சிறுவர்-சிறுமிகள் முதல் மூத்த ரசிகர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்வை எதிர்பார்த்திருந்தனர்.
தமிழக அரசு இந்தப் போட்டியை நடத்த முன்வந்தால், செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும். சென்னை ஏற்கனவே 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் கொண்ட நகரம். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் உதயநிதி இதை உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தினார்.
மேலும், குகேஷ் மற்றும் வைஷாலியின் வெற்றி இந்திய செஸ் அரங்கில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. இந்த உத்வேகத்தை தமிழகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் செஸ் சமூகம் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ₹100 கோடி செலவு என்பது பெரிதாகத் தோன்றினாலும், இந்த நிகழ்வு தமிழகத்திற்கு அளிக்கும் உலகளாவிய அங்கீகாரம், சுற்றுலா வருவாய் மற்றும் இளைஞர்களிடையே செஸ் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது செஸ் வல்லுநர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications