அமலாக்கத் துறை ரெய்டு.. திடீர் கைது.. நெஞ்சை பிடித்தபடியே சாய்ந்த செந்தில் பாலாஜி.. மறக்க முடியுமா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு டிடிவி தினகரன் அணியில் இருந்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து 2019ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் வென்றார்.
பின்னர் அவர் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் முதலே செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க ஒத்துழைக்கவில்லை என கூறி இரவு அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்வதாக கூறினர். அப்போது திடீரென செந்தில் பாலாஜி நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார். உடனே அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத் துறையினர் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ எடுக்கப்பட்டதில் அவருடைய இதயத்தில் பிளாக் இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வந்தன. இதையடுத்து அவர் நீதிமன்ற ஒப்புதலோடு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது கைதை எதிர்த்து மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
பல்வேறு வழக்குகள், மேல்முறையீடுகளுக்கு பிறகும் அமலாக்கத் துறை கைது சரிதான் என தீர்ப்பு வந்தது. செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபிக்கட்டுமே என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அவர் புழல் சிறையில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ளலாம். தேவைபட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அன்று முதல் அவர் புழல் சிறையில்தான் இருந்து வருகிறார். அவருடைய நீதிமன்றக் காவல் 11 முறை நீடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றமும் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது. சாதாரண ஜாமீன் வழக்காக தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டனர். இதனிடையே செந்தில் பாலாஜி தற்போது மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண ஜாமீனில் அவர் வெளியே வருவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications