சும்மா சும்மா கிடைக்குமா.. "கனிமொழி.. கேள்வியால் ஒரு வேள்வி செய்தீர்".. சபாஷ் போட்ட சீனுராமசாமி
கனிமொழியின் கேள்விக்கு பதிலடி தந்துள்ளார் சீனு ராமசாமி
சென்னை: "பெண்ணுக்கு தந்து மணம் முடித்த காலம் எதனால் திசை திரும்பியது? என்று டைரக்டர் சீனு ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன், "கேள்வியால் ஒரு வேள்வி செய்தீர்.. கனிமொழி" என்று திமுக எம்பி கனிமொழிக்கும் ட்வீட் செய்துள்ளார்.
கேரளாவில் கடந்த வாரம் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் இறந்தனர்..
3 பேருமே மர்மமான முறையில் உயிரிழந்தனர்.. 3 பெண்களுமே இளம்பெண்கள்.. 3 பெண்களுக்குமே வரதட்சணை பிரச்சனை இருந்துள்ளது.. 3 பெண்களின் மரணங்களும் அதிகப்படியான சந்தேகத்தை கிளப்பி உள்ளன.. இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது கேரளா. இந்த மரணங்களினால் நாடெங்கிலும் கண்டனம் எழுந்து வருகிறது

கனிமொழி
கனிமொழியும் இதற்காக கண்டனம் தெரிவித்திருந்தார்.. "இந்தியாவில் வரதட்சணை கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார்... ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை... நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்' என்று பதிவிட்டார்.

சேனல்
இந்நிலையில், ஒரு தனியார் டிவி சேனல் கார்ட்டூன் ஒன்றினை வெளியிட்டிருந்தது... என்னதான் நாடு முன்னேறினாலும், பல நூற்றாண்டு ஆனாலும், வரதட்சணை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த கார்ட்டூன் அமைந்திருந்தது.. இந்த கார்டூனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் கனிமொழி,
|
பாரதியார்
அத்துடன், "என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? பாரதியார்" என்று பாரதியின் வரிகளையும் பதிவிட்டிருந்தார். கனிமொழியின் இந்த ட்வீட்டினை டைர்க்டர் சீனு ராமசாமி ரீட்வீட் செய்துள்ளார்..

கண்ணதாசன்
"அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா? அரிசி பருப்பு சீர் செனத்தி அள்ளிக் கொடுக்க வேணாமா?-கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாட்டு நினைவில் வந்தது. பெண்ணுக்கு தந்து மணம் முடித்த காலம் எதனால் திசை திரும்பியது? கேள்வியால் ஒரு வேள்வி செய்தீர்.. கனிமொழி" என்று வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அழுத்தமாக தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications