நானா பேசலை.. ஸ்கிரிப்டட் ஒன்.. தற்கொலைக்கு தூண்டப்பட்டேன்.. யூடியூப் சேனலில் பேசிய பெண் கண்ணீர்
சென்னை: நான் பேசியது அனைத்தும் அவர்கள் பேச வைத்தது. நானாக எதையும் பேசவில்லை. இதற்காக எனக்கு 1500 ரூபாய் கொடுத்தார்கள் என யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய பெண் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக ஒரு யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளது இந்த யூடியூப் சேனல். இதையடுத்து புகாரின் பேரில் சேனல் உரிமையாளர் அசென் பாட்ஷா, அஜய் பாபு, தினேஷ் குமார் ஆகிய 3 பேர் சாஸ்திரி நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை
இதுகுறித்து அந்த வீடியோவில் பேட்டி கொடுத்த பெண் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறுகையில் நான் பேசிய அந்த வீடியோ 2 வாரங்களுக்கு முன்னர், அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவின் விஜே அசென் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு ஸ்கிரிப்ட் இருக்கிறது. அதை நீங்கள் செய்வீர்களா என கேட்டார்.

1500 ரூபாய்
நாங்களே என்ன பேச வேண்டும் என்பதை சொல்லி கொடுப்போம். உங்களுக்கும் தெரிந்த சில வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். நானும் இதற்கு முன்னர் அவரது சேனலில் எடுத்த பெண்களின் பேட்டியை பார்த்துவிட்டுதான் ஒப்புக் கொண்டேன். எனக்கு இதற்காக ரூ. 1500 கொடுக்கப்பட்டது.

ஆபாச பேச்சு
2020 எப்படி போனது என என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு நான் நிறைய விஷயங்களை சொல்லியுள்ளேன். அதை எல்லாம் போடவில்லை. நான் ஆபாசமாக பேசியதை மட்டும் போட்டு விட்டுள்ளார்கள். அவர்கள் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு என்ன இப்படி எல்லாம் கேட்கிறீர்கள் என நான் கேட்டிருந்தேன். அதையும் கட் செய்துவிட்டார்கள்.

கமென்ட் செக்ஷன்
இந்த வீடியோ வெளியான நிறைய கமென்டுகள் வரும் என்பது எனக்கு தெரியும். நான் விஜேவிடம் அந்த கமென்டுகளை எடுத்து விடுமாறு கூறினேன். அவரும் எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் எடுக்கவே இல்லை. விஜேவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது சேனல் உரிமையாளர் கமென்ட் செக்ஷனை எடுக்க மறுக்கிறார் என கூறிவிட்டார்.

தற்கொலை எண்ணம்
என்னை பற்றி கமென்டில் வந்தது கூட எனக்கு கவலையில்லை. ஆனால் சிலர் என் அம்மா, அப்பாவை பற்றியெல்லாம் பேசியிருந்தார்கள். அது எனக்கு வேதனையை தந்தது. இதனால் மிகவும் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்றுவிட்டேன். என்னை வெளியே பார்ப்பவர்கள் கேவலமாக அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

யூடியூப் சேனல்
என்னுடைய இமேஜே கெட்டு விட்டது. நான் 21 மணி நேரம் 2900 -க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மெஹந்தி போட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளேன். சிறந்த சமூக சேவகி, சிறந்த பயிற்சியாளர் என பெயர் வாங்கியவர் நான். என்னை பற்றி புகழ்பெற்ற ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு ஆர்ட்டிகிள் வெளியானது. இப்படிப்பட்ட எனக்கு இந்த யூடியூப் சேனலால் அவமானம் ஏற்பட்டது.

காசு
நான் புகழ் பெற வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. நான் நிறைய ஷோக்களை செய்துள்ளேன், ஒரு படத்திலும் நடித்துள்ளேன். நான் ஏற்கெனவே புகழின் வெளிச்சத்தில்தான் இருக்கிறேன். இப்படி பேசித்தான் நான் புகழடைய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அவர்களுடைய சேனலில் மட்டுமே போடுவதாக கூறிவிட்டு மற்ற சேனல்களிடமும் காசை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டனர்.

கேமராமேன்தான்
இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வெளியே எடுத்து வருவதற்கான ஒரு முயற்சியாகவே இதை நான் செய்தேன். விஜேவை விட இதை பேசு அதை பேசு என கூறியவர் கேமராமேன்தான். அந்த 1500 ரூபாய் எல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்லை. நான் 33 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு ஏதாவது ஒரு செலவுக்கு ஆகும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. யாருக்கும் தெரியாத விஷயங்களை நான் பேசவில்லை என்றார் அந்த பெண்.