குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி
கோவை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

மாதம் ரூ. 1000
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார நிதி நிலைமை
இந்த நிலையில்தான் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆய்வு செய்து வந்தது. எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்கட்சியினர் புகார்
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தாதைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுப்பதாக தெரிவித்தார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றம்,எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.1000 எப்போது?
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இல்லத்தரசிகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications