ரூமுக்குள் விடிய விடிய.. நகை மோசடி செய்த கிருஷ்ணகிரி பெண்ணை அடித்தே கொன்ற 5 பேர்.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நகை அடகு கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் சின்னவேடம்பட்டியை அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் அருகே சிவசெல்வி நகை அடகு கடை என்ற பெயரில் தங்க நகை அடகு கடை ஒன்றை கடந்த 9 மாதங்களாக நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ராஜாராமின் கடைக்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டிசம்பர் 8 ஆம் தேதி வந்துள்ளார்.

அப்போது, அவர் தனது பெயர் சுமதி என்றும், திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட தான் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன் என்றும், தங்க நகையை அடகு வைக்க வேண்டும், அதற்கு அடகு தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதையடுத்து, நகையைப் பரிசோதித்த ராஜாராம் அந்தப் பெண் கேட்ட தொகையை கொடுத்துள்ளார்.
எல்லாமே போலி நகை
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 9, 12 ஆகிய இரண்டு தினங்களும் வந்த அப்பெண் மேலும் சில நகைகளைக் கொடுத்து ரூ. 1.50 லட்சம் பணம் பெற்றுச் சென்றுள்ளார். பின்னர், அந்த நகைகளைப் பரிசோதித்த போது அவை போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ராஜாராம் காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்காமல் மீண்டும் அப்பெண் வருவதற்காக எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், அவர் எதிர்பார்த்தது போலவே அப்பெண் தான் அணிந்திருந்த இரண்டு வளையல்களை கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, அப்பெண்ணை பிடித்து அங்கேயே அமரவைத்த கடையின் உரிமையாளர் ராஜாராம் தனது நண்பரான மகேந்திரனை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மகேந்திரன் தனது நண்பர்கள் மூவரையும் அழைத்து 5 பேருமாக சேர்ந்து பெண்ணை மிரட்டி தாக்கியுள்ளனர்.
தொடர் மிரட்டல்
ஏற்கனவே மோசடி செய்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக கொண்டு வருமாறு கூறியுள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக யாரெல்லாம் இருந்தார்கள் எனவும் கேட்டு தொடர் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் எந்த பதிலும் கூறாத நிலையில் இரவு வரை கடையில் அமர வைத்த அவர்கள் பின்னர் கடைக்குப் பின்புறம் உள்ள அறைக்குப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அப்பெண்ணை கட்டை மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் அப்பெண் மயக்கமடைந்த சூழலில் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜாராம் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
சடலமாக கிடந்த பெண்
இதையடுத்து, ராஜாராமை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ராஜாராம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவியான சுதா என்பது தெரியந்வந்துள்ளது.
கோவை மோசடி
கணவரைப் பிரிந்து வசித்து வந்த சுதா கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக சேலத்தில் பழக்கடை நடத்தி வந்ததும், அவ்வப்போது கோவைக்கு வந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சுதாவை கோவைக்கு அழைத்து வந்தது யார், அவர் மீது ஏற்கனவே வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications