படி படி என தினமும் அடித்த கொடூர தாய்.. சிறுநீரகம் செயலிழந்து 10 வயது சிறுமி.. அடுத்து நடந்த கொடூரம்
கோயம்புத்தூர்: கோவையில் படிக்கச் சொல்லி தினமும் அடித்து துன்புறுத்தி வந்த தாயின் செயலால் சிறுநீரகம் செயலிழந்து 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனையில் வெளியான தகவலையடுத்து கொடூர தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம், மெய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (39). இவருக்கு சாந்தலட்சுமி (33) என்ற மனைவியும், அனுஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். அனுஸ்ரீ ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கட்டிலில் இருந்து சிறுமி கீழே விழுந்ததாகக் கூறி கடந்த மே 17 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, தந்தை தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மகளை தினமும் அடித்து துன்புறுத்தியதே சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் எனும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, சாந்தலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறுமி அனுஸ்ரீ நன்றாகத்தான் படித்து வந்துள்ளார். ஆனாலும், சாந்தலட்சுமி மேலும் நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து சிறுமியை கரண்டியால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகளும் சாந்தலட்சுமி அடிக்கடி சிறுமியை அடிப்பதை உறுதி செய்துள்ளனர். அனுஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு தசை கன்றிப்போய் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், தொடர்ந்து அடித்து வந்ததால் சிறுமியின் உடலில் உள்காயம் ஏற்பட்டுள்ளதோடு பல்வேறு பகுதிகளில் தசை சிதைந்து போயுள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்பட்டும் சிறுநீரக பாதிப்படைந்துள்ளததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்


Click it and Unblock the Notifications
