வீடியோ எடுத்து மிரட்டுவியா? காதலனை பீஸ் பீஸாக வெட்டிய "பாசக்கார" காதலி! கோவையில் பயங்கரம்
கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் கை ஒன்று இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணுடன் ஏற்பட்ட காதல்தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக கை ரேகைகளை வைத்து விசாரணையை காவல்துறையினர் தொடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை கண்டெடுப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் தூய்மை பணியாளர்கள் ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது பிலாஸ்டிக் கவர் ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து கவரை திறந்து பார்த்துள்ளனர். அதில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கை ரேகை
இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இது 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரினுடைய கை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேலும் விசாரித்ததில் இது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவரின் கை என தெரிய வந்ததது. பிரபு காணாமல் போனதாக அவரது மனைவி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிரபுவின் கை ரேகையும், குப்பை தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட கையின் ரேகையும் பரிசோதித்து பார்த்ததில் இரண்டும் ஒத்துப்போயுள்ளது.

செல்போன் ஆய்வு
பின்னர் பிரபுவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஹெர்பல்கேர் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் பிரபு வேலை பார்த்து வந்திருக்கும் நேரத்தில் கவிதாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு சென்ற பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர்.

பழைய காதல்
இதையடுத்து தற்போது கோவை வந்த பிரபு பழைய காதலி கவிதாவை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். கவிதாவும் சரவணம்பட்டியில் பிரபுவுக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் ஒன்றாக பழக தொடங்கியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இவரும் ஒன்றாக சேர்ந்து இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடன் கவிதா இருந்த படங்களை எடுத்துவைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

கொலை
இந்த தொல்லையை தாங்க முடியாத கவிதா, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலையில் இதனை தனது நண்பர்கள் திவாகர் மற்றும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இவர்கள் சுமார் 20 நாட்களாக பிரபுவை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என பிரபுவை அழைத்துள்ளார் கவிதா. அப்போது மறைந்திருந்த கவிதாவின் நண்பர்கள் பிரபுவை கொலை செய்துள்ளனர்.

கைது
பின்னர் உடலை மாடிக்கு கொண்டு சென்று அங்கு மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு உடலை துண்டு துண்டாக அறுத்துள்ளனர். இதனையடுத்து கைகளை ஒரு கவரிலும், தலையை ஒரு கவரிலும், உடலை மற்றொரு கவரிலும் போட்டு கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியெறிந்துள்ளனர். இதில் குப்பை தொட்டியில் வீசிய கைகள்தான் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காதலியுடன் நெருக்கமாக பழகி நிர்வாணமாக படங்களை எடுத்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டிய காதலனை காதலி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications