"இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்பவர் நம்ம முதல்வர் ஸ்டாலின் தான்.." புகழ்ந்து தள்ளிய ஆ ராசா
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப். 19ஆம் தேதி 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த ஜன.22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரியளவில் வென்றது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றது. ஒட்டுமொத்தமாக சுமார் 7700 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2019 மக்களவை தேர்தலில் தொடங்கி, அதன் பின்னர் சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ந்து திமுக கூட்டணி வென்று வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

கோவை
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அதிகப்படியான இடங்களில் திமுக வென்றது. அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட கோவையை திமுக கைப்பற்றியது குறிப்பிடத் தகுந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆ ராசா
இதனிடையே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை,கூடலூர் நகராட்சிகள் மற்றும் சிறுமுகை உள்ளிட்ட பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களைக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தியாவிற்கே வழிகாட்டி
அப்போது பேசிய ஆ. ராசா, "தமிழகத்தின் முதல்வர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளார். எதிர்கால இந்தியாவைக் காப்பாற்றுவதில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய பங்கு வகிப்பார். உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதை போல மக்களுக்குச் சேவை செய்ய நமது முதல்வர் உங்களுக்கு (உள்ளாட்சி பிரதிநிதிகள்) வாய்ப்பளித்துள்ளதைச் சரியாகப் பயன்படுத்தி நேர்மையோடும், அடக்கத்தோடும், நிதானத்துடனும் மக்களுக்கு பணியாற்றி அரசுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications