கோவைக்கு குட்நியூஸ்.. இரவு 1 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி! தீபாவளியையொட்டி போலீஸ் அனுமதி
கோவை: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்க தொடங்கி உள்ளனர். முக்கிய நகரங்களில் தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை என்பது வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை உடுத்தி தீபாவளியை கொண்டாட அனைத்து மக்களும் தயாராகி வருகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் பஜார்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. அதோடு பல இடங்களில் மழைக்கும் முளைக்கும் காளான்கள் போன்று பட்டாசு, ஜவுளி கடைகள் தோன்றி உள்ளன.
இதற்கிடையே தான் கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளுக்கான வியபாார நேரம் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக இந்த நேர நீட்டிப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதற்க வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்த காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் மேற்படி கூடுதல் நேரத்தை பயன்படுத்தி வியாபார தளங்களுக்கு வருகை புரிந்து தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கி செல்லும் வகையில் போதிய பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications