கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொறுப்பிலிருந்து அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார் நீக்கம்.. பின்னணி இதுதான்!
கோவை: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அப்துல் ஜப்பார் பேசிய பேச்சே அவர் மீதான ஜமாத் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளது.
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில இணைச் செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார் அப்துல் ஜப்பார். இவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அப்துல் ஜப்பார்.

ஜமாத் பதவியில் இருந்து நீக்கம்
"பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என நானே எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன்" எனப் பேசிய அதிமுக நிர்வாகி அப்துல் ஜபார், கோவை ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், அப்துல் ஜப்பார் பேசிய பேச்சு காரணமாக அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பேசியுள்ளார்.
"நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும், இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன். காரணம், முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கோவையில் முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவன். கோவையில் என்ன நிலவரம் என்பது எனக்கு தெரியும்.
முஸ்லீம்கள் நமக்கு ஓட்டு போடமாட்டார்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முஸ்லிம் மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தார். ஆனாலும் கூட அதிமுகவுக்கு அவர்கள் ஓட்டு போடவில்லை. 2024 மக்களவைத் தேர்தலிலும், நாம் பாஜக கூட்டணியில் இல்லை. ஆனால், நம்முடன் இருந்த முஸ்லிம் கட்சி கூட திமுகவுக்கு தான் ஓட்டு போட்டது.
பாஜக உடன் சேர்ந்தது பலம்
அதனால் நாம் ஏன் பாஜகவை பகைக்க வேண்டும்? இப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் நமக்கு மிகப்பெரிய பலம் வந்துள்ளது. ஆள் பலம், அதிகார பலம் கிடைத்துள்ளது. இன்று அதிகாரம் தான் அனைத்துக்கும் தேவைப்படுகிறது. பாஜக - அதிமுக பலமான கூட்டணியாக வரும், பலமான சக்தியாக உருவெடுக்கும்" எனப் பேசினார் அப்துல் ஜப்பார்.
அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திடீரென அவர் ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்த்ல் ஜபாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் சம்மந்தம் இல்லை என்றும், ஆட்சேபகரமான பேச்சுக்கு ஜமாத் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications