பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு ஆறுதல்.. அண்ணா பல்கலை. பாலியல் வழக்கிலும் அரசு நடவடிக்கை தேவை - அண்ணாமலை
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த தீர்ப்பு ஓரளவு மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்றும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும் உரிய நியாயம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநில முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்த வழக்கில் 9 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் லாப்டாப் மற்றும் ஐபோன் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அரசியல் கட்சியினர், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த தீர்ப்பு ஓரளவு மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்றும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும் உரிய நியாயம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.
இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications