எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி
கோவை: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் களமிறங்க நினைத்தார். ஆனால் இந்த தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு வழங்கவில்லை. இதனால் அண்ணாமலை அப்செட்டாகி உள்ளார். இந்நிலையில் தான் கவுண்டம்பாளையம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ அருண்குமார் இன்று அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அண்ணாமலை பிஎல்ஏ-வாக பணியாற்றுவதாக கூறியது கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட நினைத்தார்.

சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றில் களமிறங்க நினைத்தார். ஆனால் இந்த 3 இடங்களிலும் அதிமுகவினர் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க மறுத்துவிட்டார்.
அண்ணாமலை போட்டியிட மறுப்பு
கடந்த 2021 தேர்தலில் பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கோவை வடக்கு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியிட தயாராகி வருகிறார். கோவையில் அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதிகள் கிடைக்காததால் அவர் அதிருப்தியில் உள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளர்
இந்நிலையில் தான் அண்ணாமலை கண்வைத்து மிஸ்ஸான கவுண்டம்பாளையம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான அருண்குமார் இன்று அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அண்ணாமலை, அருண்குமார் இடையே நடந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிஎல்ஏ-வாக மாறும் அண்ணாமலை
அந்த வீடியோவில் அண்ணாமலை, ''23ம் தேதி காலையில் (சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாள்) நான் ஓட்டுப்போட்டுவிட்டு பாஜகவின் பிஎல்ஏவாக (பூத் லெவல் ஏஜென்ட்டாக) பூத்துக்குள் சென்று இருந்து கொள்வேன். அண்ணணுக்காக முழு வேலையை செய்துவிட்டு மாலையில் வருவேன். அப்புறம் நீங்கள் ஆதரவு கேட்டு வந்தால் எப்படி? ஏற்கனவே பாலாஜி வேலை செய்ய தொடங்கிவிட்டார்'' என்று கூறினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், அண்ணன் திரு. @PRGArunkumar அவர்களை, இன்றைய தினம் நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
— K.Annamalai (@annamalai_k) April 2, 2026
அண்ணன் திரு. @PRGArunkumar அவர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில்… pic.twitter.com/2IyfGfD201
இதன்மூலம் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண் குமாருக்காக பூத் லெவல் ஏஜென்ட்டாக களமிறங்கி அவரது வெற்றிக்கு உழைக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் தொகுதியின் பின்னணி
இந்த கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் தற்போது அதிமுக வேட்பாளராக களமிறங்கி உள்ள அருண்குமார் தற்போது அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். 2021 சட்டசபை தேர்தலில் அருண் குமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 669 ஓட்டுகள் வாங்கியிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 1,25,893 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் அருண் குமார் 9,776 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக 2016, 2011 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவின் ஆறுகுட்டி போட்டியிட்டு வாகை சூடியிருந்தார். இந்த தொகுதி தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த முறை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதேவேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகன்நாதன் என்பவரும், விஜயின் தவெக சார்பில் கனிமொழி என்பவரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
