இவங்களே தமிழகத்தை ஆண்டுக்கிட்டு இருந்தா.. மத்தவங்க எப்போ சிஎம் ஆகுறது? எம்எல்ஏ வானதி கேள்வி
கோவை: இவர்களே தமிழகத்தை ஆண்டுக்கிட்டே இருக்காங்க, மத்தவங்க எப்போ முதல்வர் ஆகுறது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்குள்பட்ட அசோக் நகர் பூங்காவில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இதை கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு சார்பில் பராமரிக்கப்படும் பூங்காக்களில் பெரும்பாலும் உடற்பயிற்சி கூடங்கள் இருப்பதில்லை. எனவே குடியிருப்புவாசிகள் கட்டணம் செலுத்தி தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது.

அசோக் நகர் பூங்கா
இதனை போக்கும் வகையில் அசோக் நகர் பூங்காவில் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியோடு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் உதவியை எதிர்பார்க்காமல் இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளே இதை செய்துள்ளனர். மகளிருக்கான உடற்பயிற்சி கூடம் விரைவில் இந்த இடத்தில் திறக்கப்படும்.

2 மாதங்களுக்கு முன் போடப்பட்ட புதிய சாலை
கோவை மாநகரில் 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை மழைக்கு பின் மோசமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மாநகரில் போடப்படும் சாலைகளும் தரமானதாக இருப்பதில்லை. இதை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. குடிநீர் வழங்கல், தூய்மை பணி ஆகியவையும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை.

5 நாட்களுக்கு ஒரு முறை
கோவை மாநகரின் சில பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒரு முறைதான் தூய்மை பணிகள் நடைபெறுவதாக மக்கள் புகார் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சினை வேறு போகிறது. 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தற்போது வரை ஒப்பந்த பணியாளர்களாகவே இருக்கிறார்கள். மத்திய அரசு தூய்மை பணியாளர் நலனுக்காக தனி ஆணையம் அமைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி
இதை செய்யாமல் தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிப்பது தவறு. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் மிகவும் தொய்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடர்களில் நான் பல முறை புகார் கூறியுள்ளேன். இதனால் தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. அது கூட ஆமை வேகத்தில்தான் தொடங்கியுள்ளது.

அரசியலுக்கு வரலாம்
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறிய வானதி ஸ்ரீனிவாசன், உதயநிதியை அடுத்த முதல்வர் என கூறியிருப்பதற்கு விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் அதிகாரம் முழுக்க ஒரே குடும்பத்திடம் இருக்கும். மகளிர் அணி என்றால் தங்கச்சி, இளைஞர் அணி என்றால் மகன், முதியோர் அணி என்றால் தாத்தா. மாணவரணி என்றால் வீட்டிலிருக்கும் பேரன். இதற்கு பேரு குடும்ப கட்சி இல்லாமல் வேறு என்ன. எங்கள் கட்சியில் அப்படியெல்லாம் இல்லை. அவரவர் தனித்தனியாக வேலை செய்து உயர்ந்த பதவிகளை அடைவார்கள். எங்கள் கட்சியில் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் திமுகவில் அப்படியில்லை.

விவசாய பிரச்சினை
எந்த விவசாய பிரச்சினை, எந்த மின் கட்டண உயர்வு, எந்த சொத்து வரி உயர்வுக்காக மாநில முதல்வர் பேசினாரோ, அதே தவறை அவரும் செய்கிறார். பொறுப்பான அரசியல் கட்சியின் தலைவராக அரசியலை செய்யவே இல்லை. ஒரு அரசாங்கம் எப்படி பேலன்ஸ் செய்ய வேண்டும். ஒரு புறம் மக்களுடைய வளர்ச்சி, தேவைகள், இன்னொரு புறம் சுற்றுப்புறச் சூழல், விவசாயிகள், அவர்களுடைய நிலங்கள்.

அதிமுக ஆட்சி
கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு வழிச்சாலை, விமான நிலையம் அமைப்பது போன்ற பிரச்சினைகளில் எதிர்க்கட்சியாக திமுக என்ன பேசியதோ அதைத்தான் மக்கள் பேசுகிறார்கள், அதையேதான் மற்ற அரசியல் கட்சிகள் முன் வைக்கின்றன. உங்களுடைய இரட்டை வேடம் காரணமாக உங்களுடைய சாயம் மக்கள் முன் வெளுக்கிறது. திமுக ஒரு காலத்தில் அனைவருக்குமான கட்சியாக இருந்து, மக்களுக்கான கட்சியாக இருந்து தற்போது ஒரு குடும்பத்திற்கான கட்சியாக மாறிவிட்டது. என்று குடும்ப ஆட்சியாக மாறுகிறதோ அந்த கட்சி தங்கள் சுயநலத்திற்காகவே இருக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியாக திமுக இல்லை. திமுகவில் இளைஞர்கள் என்றால் முதல்வரின் மகன், முன்னாள் அமைச்சர்களின் மகன், இன்னாள் அமைச்சர்களின் மகன், முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்களின் மகன் என்றுதான் உள்ளது. ஒரு பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற அடிப்படையான விஷயத்தை கூட நாங்கள் மாநில முதல்வரிடம் கேட்டு பார்த்துவிட்டோம். அப்படியிருக்கும் போது இவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தேதியை தவறாகதான் போடுவார்கள். தமிழகத்தை இவங்களே ஆண்டுக்கிட்டு இருந்தால், மத்தவங்க எப்போ முதல்வராகுறது என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications