35 வருட கனவு.. தொழிலாளர்களை விமானத்தில் பறக்கவைத்து.. நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கோவை முதலாளி
கோவை: தன்னுடைய அப்பாவிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் நான் பெரியவனாகி உங்களை விமானத்தில் பறக்க வைப்பேன் என்று கூறியதை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர் ஒருவர் நிறைவேற்றி தொழிலாளர்களை குஷிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் என்பது லாபம், நஷ்டத்தை மட்டும் சார்ந்தது மட்டுமல்ல. தொழிலாளர்களின் நலன் சார்ந்ததும் கூடத்தான். தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான சூழலை உருவாக்கினாலே நிறுவனம் தானாக வளரும். இதுதான் வளர்ச்சி அடைந்த மற்றும் வெற்றியடைந்த பல நிறுவனங்களின் தாரக மந்திரமாக உள்ளது. அந்த வகையில், கோவையில் உள்ள கேட்டரிங் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரையும் விமானத்தில் பறக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ராஜன். இவர் பிரியா கேட்டரிங் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். லட்சுமி ராஜனின் மகன் பிரகாஷ் தேவராஜன். லட்சுமி ராஜனின் கேட்டரிங் நிறுவனத்தில் 26க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 தொழிலாளர்களை விமானம் மூலமாக கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சேலம் வரை பறக்க வைத்துள்ளார்.
விமானத்தில் பறக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவுக்கு அழைத்துச் சென்று தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இரண்டு நாட்கள் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளச் செய்துள்ளார். தனது சிறு வயது கனவை நிறைவேற்றி தொழிலாளர்களை கண்கலங்கச் செய்துள்ளார் பிரகாஷ் தேவராஜன்.
இதுகுறித்து பிரியா கேட்டரிங்கில் பணியாற்றும் சரோஜினி தொழிலாளி கூறுகையில், எங்களது முதலாளி லட்சுமி ராஜனின் மகன்தான் தற்போதைய முதலாளியான பிரகாஷ் தேவராஜன். பிரகாஷ் சிறுவயதில் இருந்தே எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். சிறு வயதில் ஒருநாள் நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய், உன்னுடைய ஆசை என்னவென்று சாதாரணமாகக் கேட்டோம். அப்போது, நான் பெரியவனாகி உங்களையெல்லாம் விமானத்தில் அழைத்துக் கொண்டு செல்வேன் என்று கூறினார்.
அப்போது அதைக் கேட்டு சிரித்துக் கொண்டு சாதாரணமாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், அன்று அவர் சொன்னதை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். தொழிலாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தனது கனவை நிறைவேற்றிய பிரகாஷ் தேவ்ராஜனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கோவை மக்கள் மரியாதையானவர்கள் மட்டுமல்ல, நல்ல மனசும் உள்ளவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications