கணவர் மூலம் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய.. கோவை வணிக வரித்துறை உதவி ஆணையர்! ஜோடியாக கைது!
கோவை: லஞ்சம் வாங்கியதாக கோவை வணிக வரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்புட் வரியைத் திரும்பப் பெற விண்ணப்பித்த நபரிடம் மகேஸ்வரி லஞ்சம் கேட்டுள்ளார். கணவர் மூலம் அவர் லஞ்சம் பெற முயன்ற நிலையில், இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நமது நாட்டில் இப்போது கிட்டத்தட்ட அனைத்துத் தொழில்களும் ஜிஎஸ்டி வரி முறைக்குக் கீழ் தான் இருக்கிறது. முன்பு மாநிலத்திற்கு ஒரு வரி முறை இருந்தது, மாற்றப்பட்டு இப்போது நாடு முழுக்க ஒரே வரி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்வோர் எளிதாக வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய முடிவதாக சொல்லப்படுகிறது.

இன்புட் வரி ரீபண்ட்
நமது நாட்டில் வணிகர்கள் Input Taxஐ ரீபண்ட் பெறும் முறை இருக்கிறது. அதாவது தொழில் செய்யும் ஒருவர், அவர் வாங்கும் பொருட்கள் அல்லது சர்வீஸுக்கு வரியைச் செலுத்துவார். அதை Input Tax என்பார்கள். இந்த இன்புட் வரியை, அவர் தான் விற்கும் பொருட்களின் வரிப் பொறுப்பிலிருந்து (Output Tax) கழித்துக் கொள்ளலாம். ஒரு வேலை கழிக்கும் தொகையைக் காட்டிலும் கூடுதலாக வரியைச் செலுத்தியிருந்தால், அதற்கு அரசிடம் ரீபண்ட் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக ஏற்றுமதி செய்வோர் மற்றும் வரி விகிதம் குறைவாக இருக்கும் பொருட்களைத் தயாரிப்பவர்களே தங்கள் இன்புட் வரி ரீபண்ட் பெற விண்ணப்பிப்பார்கள். இதற்காக ஜிஎஸ்டி இணையதளத்தில் RFD-01 என்ற படிவம் இருக்கும். அதை நிரப்பித் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான நேரங்களில் இந்த முறையில் எந்தவொரு சிக்கலும் இருக்காது. ஆனால், சில நேரங்களில் அதிகாரிகள் இதிலும் லஞ்சம் பிரஷர் போடுவார்கள்.
லஞ்சம்
அப்படியொரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது. ரூ.60,000 லஞ்சம் வாங்கியதாகக் கோவை வணிக வரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு வணிகர் ஒருவர் தான் அதிகமாகச் செலுத்திய Input Taxயை திரும்பிப்பெற விண்ணப்பித்துள்ளார். இன்புட் வரி ரீபண்ட்டை பிராசஸ் செய்ய வேண்டும் என்றால் ரூ.60,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என வணிக வரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி கேட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், லஞ்சம் கொடுக்க விரும்பாதா அந்த வணிகர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே மகேஸ்வரி தனது கணவர் தனசேகரன் மூலம் லஞ்சத் தொகையைப் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் தனசேகரனை கைது செய்தனர்.
கைது
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவரது மனைவியும் கோவை வணிக வரித்துறை உதவி ஆணையருமான மகேஸ்வரியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications