கோவை தடாகம் சாலை வேற மாதிரி மாற போகுது.. வாகனங்களுக்கு இனி ஜாலி.. மாநகராட்சி அதிரடி
கோவை: கோவை அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் வடவள்ளி, கணுவாய் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இந்தப் பகுதிகளுக்கு மையப்புள்ளியாக இருந்த என்எஸ்ஆர் சாலை, தடாகம் சாலை சந்திப்பு மிகவும் குறுகலாக உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு மாநகராட்சி சூப்பர் முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. கல்வி, தொழில், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என்று பலவற்றில் கோவை மாவட்டம் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. மக்கள் தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதனால் கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஐடி பூங்கா, தங்கநகை தொழில் பூங்கா, மேம்பாலங்கள், மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் சாலைகளை புனரமைப்பதற்கு ரூ.400 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலை மற்றும் தடாகம் சாலையை இணைக்கும் சந்திப்பு மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது.
அவிலா கான்வென்ட் பள்ளி அருகே உள்ள அந்த சந்திப்பு வெங்கிட்டாபுரம் என்றழைக்கப்படும். மருதமலை, கணுவாய், தடாகம், ஆனைக்கட்டி, மேட்டுப்பாளையம் சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய புள்ளியாக உள்ளது. இதனால் தினசரி ஏராளமான பேருந்துகள், சரக்கு வாகனங்கள், பொது மக்கள் வாகனங்கள் அந்த வழியாக செல்லும்.
அந்த சந்திப்பை ஒட்டி அவிலா கான்வென்ட், பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை உள்ளன. இதனால் பள்ளி வாகனங்களும் அந்த வழியாக செல்லும். இப்படி அந்தப் பகுதியை தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
முக்கியமாக சந்திப்பு குறுகலாக இருப்பதால் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குபவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலும் அடிக்கடி பழுதாகி சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த சந்திப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அந்தப் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்தப் பகுதியை முழுவதுமாக அளந்து ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானங்களை அகற்ற சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பம் மற்றும் போக்குவரத்து சிக்னலை வேறு இடத்துக்கு மாற்ற சொல்லியுள்ளார்.
அங்கு இடம் மிகவும் குறுகலாக இருப்பதால் ரவுண்டானா கட்ட முடியாது. அதனால் கூடுதலாக நிலம் கையகப்படுத்தி சந்திப்பை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான அளவு நிலம் கையகப்படுத்தி என்எஸ்ஆர் சாலை, தடாகம் சாலை சந்திப்பு விரிவாக்கம் செய்யப்படும்." என்றனர்.












Click it and Unblock the Notifications