சிங்கப்பூராக மாறும் சிங்காநல்லூர்.. சரவணம்பட்டிக்கு தொடரும் சோகம்.. வெளியான மேம்பாலம் அப்டேட்
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெயர் பெற்ற கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி மேம்பாலங்கள் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கோவையின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது.

கோவை மேம்பாலம் [Coimbatore flyover]
தினசரி பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். இதன் காரணமாக மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கோவை மாநகரில் ஏற்கனவே உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், கணபதி டெக்ஸ்டூல் பாலம். வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன.
தற்போது சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திருச்சி சாலை சிங்காநல்லூர் மற்றும் சத்தி சாலை சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டும் திட்டம் நீண்டகாலமாக காத்திருப்பில் உள்ளது. சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு பலமுறை டெண்டர் விடப்பட்டு பிறகு ரத்தானது.
சிங்காநல்லூர் மேம்பாலம் டேக் ஆஃப்
கடந்த 2022 ஆம் ஆண்டே ரூ.110 கோடி மதிப்பில் சிங்காநல்லூர் மேம்பாத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தற்போது ரூ.170 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி டெண்டர் நடைபெறவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு டெண்டர் விடும் பணி நிறைவேறும் என கூறப்படுகிறது.
சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய 2 மேம்பாலங்களிலும் ஒரு பொதுவான சிக்கலும் இருக்கிறது. கோவையில் கடந்த 13 வருடங்களாக மெட்ரோ ரயில் திட்டம் காத்திருப்பில் உள்ளது. இதனால் மேம்பாலம் கட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இந்த நடைமுறையாலும் மேம்பாலப் பணிகள் டேக் ஆஃப் ஆகாமல் இருக்கின்றன.
சரவணம்பட்டி சோகம்
இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சரவணம்பட்டி மேம்பாலம் தான். சரவணம்பட்டியில் 1.4 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்றிதழ் கேட்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழில்நுட்ப குழுவினரும் சரவணம்பட்டியில் ஆய்வு செய்தனர்.
இருப்பினும் தடையின்மை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் சரவணம்பட்டி மேம்பாலம் திட்டம் கைவிடப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு பதிலாக சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது கோவை மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications