கோவையில் திடீர்னு ஆட ஆரம்பித்த சத்குரு.. வியந்த தமன்னா.. ஆர்ப்பரித்த ஜனம்.. விண்ணைமுட்டிய சிவநாமம்
கோவை: கோவை ஈஷா மையத்தில், நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இது பக்தர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தந்து வருகிறது.
சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என வருடமெல்லாம் பல சிவராத்திரிகள் இருந்தாலும், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என்பார்கள்.. மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை.

சிவாலயங்கள்: குறிப்பாக, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது.. அந்த வகையில் தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில் நேற்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோவையை பொறுத்தவரை, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். கோவை ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மகா சிவராத்திரி ஏற்பாடுகள், 2 நாட்களுக்கு முன்பிருந்தே கோலாகலமாக துவங்கியது.. நேற்று முன்தினம் முதல் இன்று அதிகாலை வரை கோலாகலமாக விழா நடைபெற்றது.
ஈஷா யோகா : இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி ஈஷா யோகா மையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக, விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் கலர்ஃபுல்லாக வடிவமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி மனைவி சுதேஷ் தன்கர், திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சினிமா பிரபலங்கள், மற்றும் பிற துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேக்றறனர்.
இளைஞர்கள்: விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறும்போது, "கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுகுரியது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன்" என்றார்.
இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பாடல்கள்: விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடியது, கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தெய்வீகம், விவசாயம், மண் சார்ந்த பாடல்களும் ஈஷாவில் எதிரொலித்தன.
இரவு முழுவதுமே கலை நிகழ்ச்சிகள் களைகட்டின.. பாடகர் சங்கர் மஹாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது... சங்கர் மகாதேவன் பாட, சத்குரு திடீரென ஆட தொடங்கியதுமே கூட்டம் சிலாகித்தது.. அப்போது நடிகைகள், தமன்னா, கங்கனா, சந்தானம், உள்ளிட்டவர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
மகிழ்ச்சி: அதிலும் தமன்னா பக்தர்கள் பூரித்து மகிழ்வதை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே நின்றார்.. கடந்த வருடமும் தமன்னா கோவை ஈஷாவுக்கு வந்திருந்த நிலையில், இந்த வருடமும் தவறாமல் பங்கேற்றிருக்கிறார்.
கைகளை தட்டி, மகிழ்ச்சியுடன் பிரபலங்கள் நடனமாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தியவாறே இருந்தனரர்.. அப்போது உற்சாக மிகுதியில் பக்தர்கள் கூக்குரலிட்டனர்... சில நிமிடங்களுக்கு, சிவ நாமம் முழக்கம் விண்ணை முட்டிக்கொண்டு துளைத்தது. உணவை மறந்து, உறக்கத்தையும் மறந்து சிவ நாமத்தை மொத்த பக்தர்களும் விடிய விடிய உச்சரித்துகொண்டேயிருந்தனர்.
மொத்தத்தில், நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது, பக்தர்களுக்கு மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications