கோவையில் கொடுமை.. பஸ், ரயிலுக்காக காத்திருந்தவர்களை கடத்தி மொட்டையடிப்பு! போராட்டம்.. கைது!
கோவை: கோவையில் தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு கட்டடத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பொதுமக்களும் பாஜக, இந்து முன்னணியினரும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தடை செய்யப்பட்ட கிறிஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுற்று வட்டார பகுதியில் நேற்றும், நேற்று முன் தினமும் சிலர் காணாமல் போனதாக சிலருக்கு தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று காலை அட்டுக்கல் வனப்பகுதி அடிவாரத்தில் சிலர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், காப்பாற்றுங்க என்று இரவு முழுவதும் கூச்சல் அழுகை சத்தம் கேட்பதாகவும் அருகில் வசித்து வரும் பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியது.

பொதுமக்கள்
அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சில பொதுமக்கள் வந்து பார்த்த போது அனைவரும் மொட்டை அடித்து 10 அறையில் 50-க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.

வடவள்ளி
விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த ஜிபின், சைமன் செந்தில்குமார் ஆகிய இருவரும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை அழைத்து வநது மறுவாழ்வு அளிக்க தங்க வைத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த மையத்திற்கு அனுமதி ஏதும் பெறாமல் இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

துன்புறுத்தல்
இதுகுறித்து தங்க வைக்கப்பட்டிருந்தவர்களிடம் கேட்ட போது பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டிருந்த தங்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி வந்து இந்த இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். எங்களிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பறித்துக் கொண்டு தங்களுக்கு மொட்டை அடித்து, கட்டை, இரும்பு பைப்புகளால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

சட்டவிரோதம்
இதையடுத்து அங்கு குவிந்த மக்கள் இவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்த 230 பேரில் சிலர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இவர்களிடம் முகவரி, பெயர் , தொடர்பு எண் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட போலீஸார் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைத்தனர்.

டிரஸ்டிக்கள் இருவர் கைது
ஆனால் சட்டவிரோதமாக தங்க வைத்தவர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கிருந்த வேனை கீழே தள்ளிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொது மக்கள் அந்த இடத்தை விட்டு திரும்பிச் சென்றனர். இதையடுத்து ஜிபின், சைமன் செந்தில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications