மேற்குவங்கம் - கோவை கன்டெய்னரில் வந்த மர்மப் பொருள்.. கலப்பட "டீ" விற்பனைக்கு செக் வைத்த அதிகாரிகள்
கோவை: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட தேயிலைக் கழிவுகளை தேயிலை வாரிய அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். லாரியில் இருந்த 13,600 கிலோ தேயிலைக் கழிவுகளை குழி தோண்டி கொட்டி அழித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், தேயிலைக் கழிவுகள் உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு கொட்டு வரப்படும் பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. இதனைக் கண்காணிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்களை பொதுமக்கள் சில சமயம் சிறைபிடிக்கும் சம்பவங்களும் அரங்கேறும்.

Image: AI created
அந்த வகையில், வடமாநிலங்களில் இருந்து கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கு தேயிலைக் கழிவுகள் கொண்டு வரப்படுவதாகவும், தரமான தேயிலைத் தூளுடன் தேயிலைக் கழிவுகளை கலந்து கலப்படத் தேயிலை தயாரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாகவும் தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குன்னூர் மண்டல அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தேயிலைக் கழிவுகள் குறித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13,600 கிலோ எடையிலான தேயிலைக் கழிவுகளை துடியலூர் அருகே, தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் இன்று மடக்கிப் பிடித்தனர்.
அந்த கழிவுகளை துடியலூர் அருகில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு கண்டெயினரில் இருந்த தேயிலைக் கழிவுகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவை தரம் குறைந்த தேயிலைக் கழிவுகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தேயிலைக் கழிவுகளை குழி தோண்டி அவற்றுடன் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து பூமியில் புதைத்தனர்.
தேயிலைக் கழிவுகள் வாங்கிய நபர்கள் யார், எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தையும் தேயிலை வாரியத்திடம் வழங்க வேண்டும் என கிடங்கு உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதேபோல, கடந்த காலங்களில் இதுவரை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்த தேயிலை மற்றும் தேயிலைக் கழிவுகள் தொடர்பான ஆவணங்களையும் தேயிலை வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
தேயிலைக் கழிவுகளை வாங்கியவர்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோல வடமாநிலங்களில் இருந்து முறையற்ற முறையில் தேயிலைக் கழிவுகளை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications