"வேண்டாம் பிலிப்ஸே".. மதுபோதையில் தகராறு.. கொடூரமாக ஆண் ஒருவர் வெட்டி கொலை.. கோவையில் ஷாக்
கோவை: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் மதுபானக்கூடத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் ஆண் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமத்தம்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக் கூடம் ஒன்றுள்ளது. ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்து வருபவரான சுரேஷ் (50)என்பவர் இங்கு நேற்று இரவு அங்கு மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

மதுபோதையில் வாக்குவாதம்
அப்போது, அங்கு திருமலைநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவருக்கும், சுரேஷுக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போதையில் இருந்த சுரேஷ் மதுபானக் கூடத்திலேயே படுத்துவிட்டார். இரவு 11 மணியளவில் மதுபானக்கூட ஊழியர்கள் மதுக்கூடத்தை மூடுவதற்காக உள்ளே இருந்த சுரேஷை தூக்கிக் கொண்டு வந்து கேட் வாசலில் படுக்க வைத்துள்ளனர்.
கொலையில் முடிந்த சண்டை
இந்நிலையில், மதுபானக் கூடத்தில் ஏற்கனவே வாக்குவாதம் செய்த தமிழ்ச்செல்வன் இரவு 11.45 மணிக்கு அங்கு வந்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷின் வலது பக்க கழுத்து மற்றும் முகம், தாடை ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை செய்த தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை இளைஞர்கள்
இதேபோல, நேற்று இரவில் கோவையில் போதை இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரை கொடூரமாகத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு போதை கும்பல்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் கற்களால் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் வெற்றி என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கீழே விழுந்தார். அந்த இளைஞர் மயக்கமடைந்த நிலையிலும், ஆத்திரம் தீராத அந்தப் போதைக் கும்பல் அவர் மீது பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அந்த கும்பலை நோக்கி ஓடிவந்து அவர்களை விரட்டியடித்தனர்.
போதைப் புழக்கம்
பின்னர் உயிருக்குப் போராடிய வெற்றியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications