கோவை மருதமலையில் நள்ளிரவில் வீடு தேடி வந்த விஐபி.. எகத்தாளத்தோடு என்ன ஒரு என்ட்ரி
கோவை: கோவை மாவட்டம் மருதமலை ஐஓபி காலனி பகுதியில் வீட்டின் கேட், கதவை உடைத்து யானை ஒன்று உணவு தேடி குட்டியுடன் வந்தது. இதனால் யானை வருவதை பார்த்ததும் பதறியடித்து மொட்டை மாடிக்கு ஓடி, குடும்பத்தினர் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை ஒன்று கேட்டை உடைத்து ஆக்ரோஷமாக வருவதாக உள்ளது.
கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூரை அடுத்த வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அட்டுக்கல் , கெம்பனூர், மருதமலை,உள்பட வனத்தை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் யானைகள் அதிக அளவு நடமாட்டம் உள்ள பகுதிகள் ஆகும். கோவையில் நரசீபுரம் தொடங்கி மருதமலை, தடாகம், காரமடை ஒட்டிய வனப்பகுதிகளில் தான் யானைகளால் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஏன் யானைகளுக்கும் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி 164 பேர் இறந்ததாகவும், இயற்கை மரணம் உட்படப் பல்வேறு காரணங்களால் 200க்கும் மேற்பட்ட யானைகள் இறந்ததாகவும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அந்த அளவிற்கு யானை மனித மோதல் கோவை வனக்கோட்டத்தில் இருக்கிறது.
அடிக்கடி கோவையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் யானைகளால் பாதிப்புப ஏற்படுவது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில் கோவை மாவட்டம் மருதமலைப்பகுதியில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் நுழைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் கதவை உடைத்துள்ளது. இது தொடர்பாக காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை ஐ.ஓ.பி. காலனி பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை ஒரு காட்டு யானை குட்டியுடன் உலா வந்திருக்கிறது. அப்போது, அங்கிருந்த வீட்டிற்குள் யானை ஆவேசமாக நுழைய முயன்றது. ஆனால் வீட்டின் முன் கதவு இருந்தது. அந்த கதவை உடைத்த யானை, தனது தும்பிக்கையால் உணவு பொருள்கள் ஏதேனும் கிடைக்கிறதா எனத் தேடிப்பார்த்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தவர்கள் யானையின் சத்தம் கேட்டு, ஓடிப்போய் மாடியில் உள்ள அறைகளில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினார்கள்.
இச்சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஊருக்குள் அடிக்கடி யானை வருவதால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications