கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல்
கோவை: சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அடுப்பில்லா சமையல் மேல் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அடுப்பில்லாமல் 2000க்கும் மேற்பட்ட உணவுகளை தயார் செய்யலாம் என்கிறார் கோவையைச் சேர்ந்த படையல் சிவா!
எண்ணெய் இல்லா (No oil), அடுப்பில்லா உணவு (Cooking Without Fire) என்ற இயற்கையான உணவு முறை நீண்டகாலமாக இருந்து வந்தாலும் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு உணவகங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில உணவகங்களில் சிலிண்டர் கையிருப்பை பொருத்து முக்கியமான உணவுகளை மட்டும் அளித்து வருகிறார்கள். தோசையில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் அவற்றை குறைத்திருக்கிறார்கள். அது போல் கலவை சாதங்களையும் குறைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது நோ ஆயில் நோ பாயில் என்ற முறை டிரென்ட்டாகி வருகிறது. அடுப்பிருந்தாலே நம்மால் குறிப்பிட்ட சில வகைகளை மட்டுமே செய்ய இயலும் நிலையில், அடுப்பே இல்லாமல் 2000-க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கி வருகிறார், கோவையை சேர்ந்த படையல் சிவா! வெறும் இட்லி, தோசை, என்றில்லை, இந்த கால குழந்தைகளுக்கு பிடித்த பீட்சாவையும் செய்து வருகிறாராம்.

எப்போதும் இயற்கையுடன் ஒன்றி இரு என்பார்கள். ஆனால் இத்தனை நாட்களாக நம்மால் சில பல வசதிகளை விட்டுவிட்டு இயற்கையோடு இருக்க முடியவில்லை. ஆனால் இன்று சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பலர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
பொதுவாக எண்ணெய் சேர்க்காத உணவுகள் உடலுக்கு நல்லவை. அதிலும் இயற்கையான காய்கறிகளை நாம் இயற்கையான முறையில் வேக வைத்து சாப்பிட்டால் உடல்நலமுடன் இருக்கும் என்பதை மறுக்க இயலாது.

இது போல் இயற்கையை பேணி காக்க கடந்த 13 ஆண்டுகளாக படையல் எனும் உணவகத்தை நடத்தி வருகிறார் சிவா. இவரிடம் ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் பேசிய போது அவர் பிரத்யேகமாக சொன்ன கருத்துகளை பார்க்கலாம்.
அவர் கூறுகையில், கோவையில் அடுப்பு இல்லாமல் எண்ணெய் இல்லாமல் உணவு சமைத்து கொடுத்து வருகிறோம். மற்ற உணவகத்தை போல் நமது உணவகத்திலும் இட்லி, பொங்கல், கிச்சடி, டீ, காபி செய்து கொடுக்கிறோம்.
மதிய நேரத்தில் 30 நாட்களுக்கு 30 வகையான பாரம்பரிய அரிசி, நாட்டு காய்கறிகள், கீரைகளை பயன்படுத்தி சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அவியல், ஊறுகாய், வடை, பாயாசம் உள்ளிட்டவைகளை செய்து தருகிறோம்.

மாலை நேரங்களில் புட்டு, இடியாப்பம், பணியாரம், கொழுக்கட்டை, பீட்சா, நூடுல்ஸ், பர்கர் உள்ளிட்டவைகளையும் கொடுத்து வருகிறோம். அடுப்பில்லாமல் எப்படி செய்வது என்றால் பொருட்களை எலுமிச்சை சாறு, தேங்காய் பால், தேங்காய் தண்ணீர், மஞ்சள் உள்ளிட்ட 8 வகையான பொருட்களில் ஊற வைப்பதால் வெந்துவிடும்.
வாழைப்பூ வடையும் செய்கிறோம். வாழைப்பூவை எலுமிச்சை சாறில் ஊற வைத்தால் அது 15 நிமிடத்தில் வெந்துவிடும். அதாவது எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலத்தன்மை, காயில் இருக்கும் கடினத்தை நீக்கி, வேக வைத்துக் கொடுக்கும்.

இட்லி செய்வதற்கு ஒன்றரை நாள் ஆகும். அதாவது அரிசி ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து இட்லியை வேக வைக்கிறோம். ஆனால் அடுப்பில்லாத முறையில் 15 நிமிடத்தில் இட்லி தயார் செய்துவிடலாம். 2 நிமிட நூடுல்ஸ் போல் 5 நிமிடத்தில் உப்புமா, புட்டு உள்ளிட்டவைகளை செய்யலாம்.
எங்கள் உணவகங்களுக்கு போதிய வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களுக்கும் நாங்கள் ஆர்டரின் பேரில் நோ ஆயில் நோ பாயில் முறையில் உணவு செய்து வருகிறோம். 6 கின்னஸ் சாதனைகளை படைத்துளோம்.
எங்கள் உணவுகளில் மாட்டு பால் அதன் மூலம் தயாரிக்கப்படும் தயிர், மோர் சேர்ப்பதில்லை. ஆனால் தேங்காய் பாலில் எலுமிச்சை சாற்றை கலந்து விட்டால் அந்த பால் தயிராகிவிடும். அதைத்தான் பயன்படுத்துகிறோம். இவ்வாறு படையல் சிவா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications