கோவை வரும் பிரதமர் மோடியுடன் சந்திப்பா? சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்.. அதிரும் அரசியல் களம்
கோவை: தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக கோவை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனும் மோடியை சந்திக்கிறாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பதிலளித்த செங்கோட்டையன் சஸ்பெண்ஸ் எனக் கூறியுள்ளார்.
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

மோடி - எடப்பாடி சந்திப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் பிரதமர் மோடி வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தனது பயணத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் ரீதியாக பேசப்படலாம் என்று சொல்லப்படுவதால் பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்
திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி கூறி வருகிறார்.
அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். இது ஒருபக்கம் இருக்க அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன், இவ்விவகாரத்தில் எடப்பாடிக்கு கெடு விதித்தார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இதனால் அப்செட் ஆன எடப்பாடி, செங்கோட்டையன் கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து சில நாட்கள் மவுனமாக இருந்த செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி விழாவில் ஓ பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார். மேலும் டிடிவி மற்றும் சசிகலாவையும் சந்தித்து இணைப்பு தொடர்பாக பேசினார். இதையடுத்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வருகிறார். முன்னதாக டெல்லியில் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறினார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில், "ஒருங்கிணைந்த அதிமுகவை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல முடிவு வரும்.
மோடியை சந்திக்கிறேனா?
அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜக என்னை எப்போதும் அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை. நான் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்தேன். அவரிடம் பேசியதை வெளியே சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. அவர் ஒரு முறைதான் அழைத்தார். அடுத்து இருமுறை நானே சென்று சந்தித்தேன்" என்றார்.
ஆனால் இதனை பாஜக தரப்பு உறுதி செய்யவில்லை என்றாலும், செங்கோட்டையன் பின்னால் இருந்து பாஜகவே இயக்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழலில், கோவை வரும் பிரதமர் மோடியை செங்கோட்டையன் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "சஸ்பென்ஸ்" என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications