அதிமுக பாஜக கூட்டணி.. ஒரே வார்த்தையில் எண்டு கார்டு போட்ட ஓபிஎஸ்.. இவருக்கா இந்த நிலைமை
கோவை: அதிமுக பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?.. அதிமுக பாஜக கூட்டணி வெற்றி அடையுமா?.. என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சிறை சென்றபோது மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தபோதும், தனக்கு பதில் முதலமைச்சர் பதவிக்கு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ பன்னீர்செல்வம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்து வந்தார். 5 ஆண்டுகள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், மூன்று முறை தமிழக முதலமைச்சர் என பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் 3 வது முறையாக பதவியேற்ற ஓபிஎஸ், 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஜெயலலிதா சமாதி முன்பு நடத்திய தியானம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தை அன்று தொடங்கினார். இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் ஓபிஎஸ்.
இதைத்தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில், எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஓ. பன்னீர் செல்வம் கடும் மன உளைச்சலுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் தொண்டர்கள் புடைசூழ ஓ பன்னீர்செல்வம் இருந்த நிலையில், தற்போது ஒரு சில ஆதரவாளர்களுடன் மட்டுமே இருக்கிறார். இந்நிலையில், கோவை மாவட்டம், கணபதி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
ஆர்.கே.ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் ஆண்டுதோறும் புத்துணர்வு சிகிச்சையை எடுத்துக் கொள்வதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்துள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காக கடந்த வாரம் 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எந்தவிதமான பதிலையும் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?.. அதிமுக பாஜக கூட்டணி வெற்றி அடையுமா?.. என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இன்று விடுமுறை என பதில் அளித்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். இன்று விடுமுறை என்பதால் பேட்டி அளிக்கவில்லை என்றும், அனைவருக்கும் புனித வெள்ளி வாழ்த்து செய்தி கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications