ஒரு வாரத்தில் கோவைக்கு முக்கிய அறிவிப்பு.. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சஸ்பென்ஸ்
கோவை: முதமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கோவையில் நேற்று முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது தான் தமிழ்நாட்டில் அதிகமுறை விசிட் செய்தது கோவைக்கு தான் என்று கூறியிருந்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த ஒரு சில வாரங்களில் கோவைக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் TN Rising தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "கோவை தான் தொழில் வளர்ச்சியின் தொடக்கம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருத்து கேட்டதில் இங்குள்ள தொழில்துறையினர் அரசு நிர்வாகத்தோடு இணைப்பாக இல்லை என்பது தெரிந்தது. பிறகு அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

முதலீட்டாளர் மாநாடு
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி மேற்கொள்ளப்படும். அதற்கு கோவை நிகழ்வு தொடக்கமாக இருக்கும். மேற்கு மண்டலம் புறக்கணிக்கப்படாமல் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் வட மாவட்டங்களில் எலக்ட்ரானிக் உதிரிபாகம் உற்பத்தி அதிகமாக உள்ளது. அவற்றை மேற்கு மண்டலத்துடன் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. அதனால் தான் கோவை ரைசிங்க் என்று கூறுகிறோம். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மேற்கு மண்டலத்தில் 170 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 6 சிப்காட் தொழில் பூங்காக்கள் திறக்கப்படவுள்ளன. அதற்கான நிலத்தை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சூலூரில் தொழில் பூங்கா வரவுள்ளது. சேலம் விமான நிலையம் விரிவாக்கம் பரிசீலனையில் உள்ளது. அது போல் நாமக்கல் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறுகிறது. ஒட்டு மொத்தமாக மேற்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சிக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது." என்றார்.
சென்னை கோவை
பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பி ராஜா, "முதலீடு செய்வோருக்கு முதல் நாளில் இருந்தே வழிகாட்டியாக இந்த அரசு செயல்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அரசு மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு பெரிய மாநாட்டை தற்போது நடத்த முடிந்தது. சக்தி, எல்எம்டபிள்யூ, பிரிகால் போன்ற நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் ரூ.42,742 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
பொருட்கள் தயாரிப்பு, சர்வீஸ் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆர்என்டி ஆராய்ச்சியை பொறுத்தவரை ஒட்டு மொத்த இந்தியாவுக்கான ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக சென்னையும், கோவையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு தோறும் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்கு உயர் தர வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் முதலீடு பெறப்பட்டு வருகிறது. கோவையில் அதற்கான ஏற்ற சூழல் உள்ளது.
விரைவில் அறிவிப்பு
எல்காட் டெண்டர் ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சில வாரங்களில் இன்னும் ஒரு முக்கியமான அறிவிப்பு கோவைக்கு வர இருக்கிறது. டிசம்பர் 7 ஆம் தேதி மதுரையில் TN Rising முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அங்கும் மிக முக்கியமான அறிவிப்பு இருக்கும். உலகத்தில் எந்த உதிரிபாகமாக இருந்தாலும் தமிழ்நாட்டிலும் தயாரிக்கலாம். இதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைவதுதான் நமது நோக்கமாக உள்ளது.
எந்த முதல்வரும் இப்படி யோசித்து, யோசித்து செய்தது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் என்ன தேவையோ? அதனை தேடி, தேடி முதல்வர் செய்கிறார். செமி கண்டக்டர் தயாரிப்பு தொடர்பான எல்லா முதலீடும் தமிழ்நாட்டிற்கு தான் வருகிறது. பெரிய நிறுவனங்களின் மூச்சு காற்றே சிறு, குறு நிறுவனங்கள் தான். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கையை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் செய்து வருகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications