வாடகை வண்டி கோவையில் ரூ.1000 கேட்கறாங்க! இலவச ரேஷன் இருந்தும்.. கோயம்புத்தூர் ஆதிவாசி மக்கள் கோரிக்கை
கோவை: இலவச ரேஷன் பொருட்களை தங்கள் கிராமத்துக்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி இல்லை என்று கலங்கி சொல்கிறார்கள் கோவை மாவட்ட ஆதிவாசி மக்கள்.. தங்களுக்கு நல்ல சாலை வசதியும், முறையான மின்சார வசதியும், தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றும் கடம்பன்கோம்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நிவாரணம்: இதையடுத்து, ரேஷன் கடைகளில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்ட 3 முதல் 4 நாட்களில் முழுமையாக நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், தொலைத்தொடர்பு சேவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன.. எனவே, ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டது..
விரல் ரேகை: அதனால்தான், விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், கார்டு ஸ்கேன் செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை 4 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்தது.. இந்த அறிவிப்பானது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட சூழலில், இலவச ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்காக, 1,000 ரூபாய் வண்டி வாடகை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்..
ஆதிவாசி மக்கள்: காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்டது கடம்பன்கோம்பை மலைவாழ் கிராமம். பில்லூர் அணையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டரில், மலைப்பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது... இங்கு 30க்கும் மேற்பட்ட மலைவாழ் ஆதிவாசி மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை.
கடம்பன்கோம்பை மலைவாழ் கிராமத்தில், பரம்பரை பரம்பரையாக பல ஆண்டுகளாக ஆதிவாசி மக்கள் வசித்து வந்தாலும் இவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. மின்சார வசதியும் இல்லை.
மண் அரிப்பு: வனத்துறை சார்பில் அமைத்துள்ள சாலையில்தான், ஆதிவாசி மக்கள் நடந்து சென்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், மண் சாலை முற்றிலும் சேதம் அடைந்ததுடன், பாதையிலும் மண் அரிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் நடந்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமானால், இந்த கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் மலைப் பகுதியில் நடந்து வந்துதான் வாங்க வேண்டுமாம். அதாவது, பில்லூர் அணை செல்லும் சாலையில் வந்து நின்றால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் பில்லூர் அணைக்கு செல்கிறார்கள்..
வாடகை பணம்: அங்கு ரேஷன் பொருட்களை வாங்கினாலும், அதை மறுபடியும் மலைவாழ் கிராமத்துக்கு ஜீப்பில் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.. இந்த ஜீப்புக்கு 1,000 ரூபாய் வாடகை கேட்கிறார்களாம். அரசு இலவசமாக இலவச ரேஷன் பொருட்களை தந்தாலும், அவைகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல, ஜீப்புக்கு வாடகை செலுத்த வேண்டியிருப்பதாக வேதனையுடன் கூறுகிறார்கள்.
எனவே, தங்களுக்கு நல்ல சாலை வசதியும், முறையான மின்சார வசதியும், தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று கடம்பன்கோம்பை மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications