மக்கள் கேண்டீன், சீட் தேர்வு.. கல்வி சீர்த்திருத்தம்.. கமல்ஹாசன் வெளியிட்ட மநீம தேர்தல் அறிக்கை!
சென்னை: மக்கள் கேண்டீன், சீட் தேர்வு, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், அடுத்த ஒரே ஆண்டில் நாடாமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை கைப்பற்றினார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியுமே தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஏற்கனவே திமுக, அஇஅதிமுக சார்பில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குடும்ப தலைவிக்கு மாதம் 1000 என திமுகவும், 1500 என அதிமுகவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
தேர்தல் அறிக்கை
மக்கள் நீதி மய்யம் தான் இந்த திட்டத்தை முதல் முதலாக அறிவித்ததாக கூறியிருந்த கமல்ஹாசன் இந்த திட்டத்தை கழகங்கள் காப்பி அடித்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து 108 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மக்கள் கேண்டீன், சீட் தேர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கை குறித்து கமல் சில விஷயங்களை வெளியிட்டிருந்தார். அதன் விவரம் வருமாறு:

விவசாய தொழில் உற்பத்தி
1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும்.
2. விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.
3. 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
4. நதி நீர் இணைப்பு அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் நீலப்புரட்சி
5. விவசாயம், இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்க்கப்படும்.
6. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி செய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.

அரசு பள்ளிகல்வி
7. கிராமப்புற சுய சார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அப்துல்கலாம் புரா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
8. அரசு பள்ளிகல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். அடிப்படை கல்வி, சீர்த்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம் செய்யப்படும். மாணவர்களின் படிப்பு சுமையும் குறைக்கப்படும்.
9. 1.3 கோடி பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.
10. உயர்கல்வி- உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்.

நீட் தேர்வு இல்லை
11. தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 'சீட்' தேர்வு (SEET), அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
12. யுஎன்ஓ- அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும்.
13. சுற்றுப்புற சூழலுக்கேற்ற தொழில்துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 185 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதி செய்யப்படும்.
14. நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
15. கிராமப்புற, நகர்ப்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலக தரத்தில் மேம்பாடு.
16. தமிழ்மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.

இடஒதுக்கீடு
17. சாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம்.
18. மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளை பின்பற்றி அதை நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்.
19. இடம் ஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும் வரை இடம் ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும்.
20. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு.
21. அரசு வேலை வாய்ப்பில் 69 சதவீதம் உறுதி.
22. கடனில்லா தமிழகம், வரிகுறைப்பு, நீடித்த வளர்ச்சி, வரிக்கு நிகரான வருமானம்.












Click it and Unblock the Notifications