“முழக்கால் தண்ணீரில் படகு ஓட்டும் நபர்கள்”.. பாஜகவை மேடையிலேயே கலாய்த்த செந்தில் பாலாஜி! பரபர பேச்சு
கோவை: கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் காலை தொடங்கி வைத்த நிலையில், தற்போது முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.
இந்த விழாவில் தலைமை உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோலை பரிசாக வழங்கினார்.

இன்று காலை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவை மாவட்ட வரலாற்றிலேயே இத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதன் முறைய என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். கொங்கு மண்டலம் பொதுவாக பாஜக, அஇஅதிமுக கட்சிகளின் கோட்டையாக இருந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திருச்சியில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் வரலாறு காணாத அளவில் கூட்டம் குவிந்ததைப் போல தற்போது கொங்கு மண்டலத்திலும் கூட்டம் குவிந்து வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல முக்கிய முக்கிய புள்ளிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதில் தலைமை உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டின் நல்லாட்சி தொடர்வதற்கு இந்த பொள்ளாச்சி வழிவகுக்கும். நோட்டாவோடு போட்டி போடும் சில இயக்கங்கள் உள்ளன. முழங்கால் தண்ணீரில் படகு ஓட்டி நாடகம் போடும் நபர்கள் உள்ளனர்" என பாஜகவையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் வாழ வேண்டும் என்றால் தளபதிதான் ஆளவேண்டும். கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய கட்டிய ஈட்டிகளாய் திரண்டு இருக்கும் திராவிட சொந்தங்களே, எந்நாளும் முதல்வர் பாதையில் வழிநடப்போம்.
ஒற்றை செங்கல் கொண்டு செங்கோல் வென்ற சின்னவர் சொல்கொண்டு நமது லட்சியத்தை வென்றிடுவோம். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் சிந்திக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு இலவசங்களை வேண்டாம் என்கிறது. ஆனால் பெண்கள் பயனடைய வேண்டும் என நம்முடைய முதலமைச்சர் மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதியை உருவாக்கினார். மீண்டும் ஒன்றிய அரசு இலவசங்களை வேண்டாம் என்கிறது, ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அதேபோல கல்லூரி பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை முதலமைச்சர் வழங்குகிறார். ஆனால் மீண்டும் ஒன்றிய அரசு இலவசங்கள் கூடாது என்றுதான் சொல்கிறது. இதையெல்லாம் பார்த்து மக்களாகிய நீங்கள் தமிழக பாஜவினரிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. திமுக அரசு எங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளது. ஆனால், ரூ.410க்கு விற்ற சிலிண்டர் இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏன் விற்கிறது என்பதுதான் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி.
மட்டுமல்லாது 54 ரூபாய்க்கு விற்ற டீசல் இன்று நூறு ரூபாயை தொடும் அளவுக்கு விற்றுக்கொண்டிருக்கிறதே எந்த முகத்தை கொண்டு நீங்கள் தமிழ்நாட்டில் பிச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்திட எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக முழு வெற்றியை பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும். புதிதாக இணைந்தவர்கள் இதற்கான பணியை ஆற்றிட வேண்டும்.
அதேபோல சில குறிப்பிட்ட பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு சிலர் அதில் அரசியல் செய்ய நினைக்கின்றனர். குறிப்பாக ஆழியாறு பிரச்னை. இந்த கூட்டத்தில் வைத்து சொல்கிறேன். இந்த பிரச்னைக்கு நிச்சயம் முதலமைச்சர் தீர்வு காண்பார். இதற்காக போராட வேண்டாம். போராடினால்தான் இந்த அரசு நமக்கு செய்யும் என்று இல்லை. போராடாமலேயே அரசு நமக்கு பல விஷயங்களை செய்துள்ளது. அதுபோலவே இந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications