எதை நாங்கள் தடுத்தோம்? அண்டப்புளுகு ஆகாசப்புளுகு.. இது மோடி புளுகு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
கோவை : தமிழ்நாட்டுக்கு வரும் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் பொய் சொல்லுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களை மாநில அரசு தடுத்தது? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, இது மோடி புளுகு என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமிதத்துடன் உங்களை சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்வது நிச்சயம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், இன்னுயிர் காப்போம், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சராக மட்டுமில்லாமல் களத்தில் நேராக சென்று ஆய்வுசெய்கிறேன்.
மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை. பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலிங்கராயன் வாய்க்கால் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. திருப்பூர் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு, 800 கி.மீ. சாலைகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.
காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி. பூங்கா தரம் உயர்த்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும்.
மஞ்சள், மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு வீ கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கு வரும் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் பொய் சொல்லுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களை மாநில அரசு தடுத்தது? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, இது மோடி புளுகு.
எய்ம்ஸ் கொண்டு வருவதாக சொன்னார்கள். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ஜெயலலிதா அதை தடுத்தார்களா? இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதேனும் திட்டங்களை கொண்டு வர விடாமல் தடுத்தோமா? இல்லை. மக்கள் ஏதேனும் திட்டம் வேண்டாம் என தடுத்தார்களா? இல்லை என்று மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடினார்.












Click it and Unblock the Notifications