பொள்ளாச்சியில் கொடூரம்.. 17வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்து தாக்கிய தொழிலதிபர்.. போலீஸ் வலை
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தாக்கிய தொழிலதிபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு சிறுமியின் அத்தையும் துணை சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்து சில நாட்கள் தான் ஆகின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்ற தொழிலதிபர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தாக்கியதாக காவல்துறையில் புகார் எழுந்தது.
17 வயது சிறுமிக்கு அருண்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் இதுகுறித்து அருண்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களிடம் மிகவும் ஆணவத்துடன் பேசிய அருண், தந்தையின் கண் முன்பே சிறுமியை தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'சிறுமியின் தாயின் புகார் அடிப்படையில் அருண்குமார் உள்ளிட்ட 2 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரச் செயலுக்கு சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான அருண்குமாரை தேடி வருகிறோம். விரைவில் அருண்குமார் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்போம்.' என்றனர்.












Click it and Unblock the Notifications