கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் வெற்றி நிரந்தரமாக நின்று பேசும் என்று கூறியுள்ளார். மேலும் 10 தொகுதிகளிலும் நானே நேரடியாக இறங்கி வேலை செய்ய போவதாக அவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, "கோவையில் போட்டியிடும் வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவை தெற்கு தொகுதி வெற்றியை தலைவருக்கு சமர்பிப்பேன். திமுகவில் வாய்ப்பு கிடைக்காததற்கு ஆதங்கப்பட வேண்டாம். வாய்ப்புகள் வழங்குவது பற்றி தலைவர் தான் முடிவு செய்வார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை நாளில் பொறுத்திருந்து பாருங்கள்.

ஸ்டாலின் பிரச்சாரம்
நான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று முடிவெடுப்பது முதலமைச்சர். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதையும் தலைமை தான் முடிவெடுக்கும். கோவை தெற்கு இந்த முறை உதயசூரியன் வெற்றி பெறும். நாளை முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் பிரச்சாரம் செய்கிறார். இங்குள்ள 7 தொகுதிகளுக்கு பரப்புரை செய்கிறார்.
விஜயின் வாக்கு திமுக வாக்கை சிதறடிக்காது. எங்கள் வாக்கு எங்களிடம் தான் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்குமான போட்டி என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். எங்களுக்கு ஆதரவளித்துள்ள மதசார்பற்ற போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தோழமை இயக்கங்களுக்கு நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத நிலை நிலவியது.
கோவைக்கு திட்டங்கள்
தற்போது நிலைமை மாறிவிட்டது. முதலமைச்சர் 234 தொகுதிகளிலும் வேட்பாளராக இருந்து மக்கள் பணிகளை மேற்கொண்டார். கோவையில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், தங்க நகை பூங்கா, மேம்பாலம் என்று பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. கோவையில் ரூ. 8,200 கோடி மதிப்பில் பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்.
இங்கு எனக்கு அழுத்தம் இருப்பதாக வேறு யார் வேண்டுமென்றால் கருதலாம். என்னை பொறுத்தவரை தொகுதிக்குள் அப்படி எந்த அழுத்தமும் இல்லை. இந்த பகுதி மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் வெற்றி என்பது உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது போன்ற அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
மக்கள் ஆதரவு
எனவே அவர்களுக்கு பதற்றம் இருக்கலாம். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு அமைப்புகளையும், சங்கத்தினரையும் நேரடியாக பார்த்து ஆதரவை கேட்டு வருகிறோம் . இங்கு நாங்களும் ஒரு இலக்கு வைத்து தான் செயல்படுவோம். 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நான் பயணிக்க போகிறேன். 2021 தேர்தலில் இங்கு பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளார்கள்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதை சரி செய்தாலே எங்களுக்கு வெற்றி வெற்றி கிடைக்கும். என்னுடைய பெயரிலேயே பல வேட்பாளர்கள் நின்றாலும் குழப்பங்கள் வராது. எங்கள் சின்னம் தெளிவாக உள்ளது. மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு தருவதற்குத் தயாராக உள்ளார்கள். மே 4 ஆம் தேதி அது அனைவருக்கும் புரியும்.
வெற்றி நின்று பேசும்
கரூர், கோவை இரண்டுமே என் இரு கண்களை போன்றவை. கோவையில் பெறும் வெற்றி, இந்த ஒருநாள் மட்டுமல்ல.. எந்நாளும் திமுக மற்றும் மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கோவையில் திமுக பெறும் வெற்றி என்பது தற்காலிகமானதல்ல, அது மாவட்டத்தின் நிரந்தர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கோவை தெற்கு தொகுதியை மாவட்டத்திலேயே முதன்மைத் தொகுதியாக மாற்றப் பாடுபடுவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications