டாஸ்க் மாஸ்டர்! வெளியூர் ஆட்டக்காரங்களை இறக்கி.. கோவையில் கொடி நட்ட செந்தில் பாலாஜி -எப்படி நடந்தது?
கோயம்புத்தூர்: கோவையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இங்கு திமுக கூட்டணியின் வெற்றிக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கடும் உழைப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முன்னணி நிலவரங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
கோவையில் 100 வார்டுகளில் 43 வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இன்னும் 8 வார்டுகளை வென்றால் கோவையை திமுக கைப்பற்றிவிடும். இங்கு அதிமுக வெறும் 2 வார்டுகளை மட்டுமே வென்றுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு டாஸ்க்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே கோவையை பிடிக்கும் "டாஸ்க்" செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது. கோவையில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாடு அரசியலை மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக ஒரு மாவட்டத்தை பிடிக்கும் பாஜக அப்படியே அருகருகே உள்ளே மாவட்டங்களில் விரிவடையும். இதை தடுக்கும் பொருட்டும், அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவையை பிடிக்கும் பொருட்டும் செந்தில் பாலாஜிக்கு இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கடும் உழைப்பு
கடந்த 6 மாதமாக இங்கு இதற்காக செந்தில் பாலாஜி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து இருக்கிறார். தொடர் ரெய்டுகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கு எஸ்பி வேலுமணி முடங்கிய நிலையில் செந்தில் பாலாஜி மிக கடுமையான பணிகளை செய்தார். ஆனால் கரூர் காரர் என்பதாலும், முன்பு அதிமுகவில் இருந்தவர் என்பதாலும் செந்தில் பாலாஜிக்கு கோவை திமுகவிலேயே பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.

திமுகவிலேயே சிலர் முட்டுக்கட்டை
எல்லா கட்சியிலும் கோஷ்டி மோதல் இருப்பது போல கோவையிலும் திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் கோவை மாநகராட்சியை வென்று காட்டும் பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. கஷ்டமான வேலைதான். கோவை நிர்வாகிகள் "சிலர்" செந்தில் பாலாஜிக்கு முட்டுக்கட்டை போட்டதால் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை கோவையில் இறக்கி தேர்தல் பணிகளை செய்தார் செந்தில் பாலாஜி.

காங்கிரஸ் உதவவில்லை
முழுக்க முழுக்க இப்படி "வெளியூர் ஆட்டக்காரர்களை" வைத்துதான் செந்தில் பாலாஜி தேர்தல் பணிகளை செய்தார். செந்தில் பாலாஜி எங்கே கோவையை ஸ்வீப் செய்தால் அவருக்கு பெரிய பதவிகள் வந்துவிடலாம் என்பதால் திமுகவிலேயே சிலர் இதற்கு முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை எல்லாம் மீறித்தான் செந்தில் பாலாஜி இங்கே வேலை பார்த்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியுடனான மோதல் காரணமாக செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் உதவியும் கிடைக்கவில்லை.

அதிமுக இறக்கிய பணம்
இதனால் திமுக தனித்தே பிரச்சாரம் செய்தது. கடைசி கட்டத்தில்தான் காங்கிரஸ் - திமுக இடையே கொஞ்சம் சுமுகமான இணக்கம் ஏற்பட்டு பிரச்சாரங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் திமுக கோவையில் ஆர்வம் காட்டுவதை தெரிந்து கொண்டு பாஜக, அதிமுக இங்கு அதிக அளவில் ஆட்களை இறக்கி பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. பண பலம், பொருள் பலம் ஆகியவற்றை இறக்கிய நிலையில் செந்தில் பாலாஜிக்கும் இதில் "ஃப்ரீ ஹேண்டு" கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுகவும் இதற்கு இணையாக "கிப்ட் பாக்ஸ்களை" இறக்கியதாக கூறப்படுகிறது.

வேலுமணி vs செந்தில் பாலாஜி
அதிலும் கோவையில் கடைசி 10 நாட்கள் வேலுமணி vs செந்தில் பாலாஜி இடையே கடும் மோதல் இருந்தது. கோவையில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை வெளியே அனுப்புங்கள் என்று வேலுமணி தர்ணா செய்தது "வெளியூர்" ஆட்டக்காரர் செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டிதான் என்கிறார்கள். செந்தில் பாலாஜி கோவையில் இருந்த ஒவ்வொரு நாளும் வாக்குகள் திமுக பக்கம் ஸ்விங் ஆனதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது .

கரூர் பார்முலா
கரூரில் திமுக உறுதியை மற்ற திமுக நிர்வாகிகள் உறுதி செய்த நிலையில்தான் செந்தில் பாலாஜி கோவையில் திமுகவை வெற்றிபெற வைத்து இருக்கிறார் என்கிறார்கள். கரூரில் சட்டசபை தேர்தலை திமுக ஸ்வீப் செய்த கரூர் பார்முலாவை பயன்படுத்தி திமுக இப்போது கோவை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு டாஸ்க்குகளை முடித்ததால் திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை இணையத்தில் டாஸ்க் மாஸ்டர் என்று அழைக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications