இதெல்லாம் உனக்கு தேவையா கோபி? இன்ஸ்பெக்டர் வாகனம் முன்பு கெத்தாக ரீல்ஸ்.. கொத்தாக தூக்கிய போலீஸ்!
கோவை : கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகனம் மீது அமர்ந்தபடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சந்தோஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸ் லைக்குக்காக ஆசைப்பட்டு வசமாய் சிக்கிய அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே சார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின. இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க டாஸ்க் வீடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டுவது, பேருந்து ரயில்களில் சாகசம் செய்வது, காவல் நிலையத்தில் ரீல்ஸ் போடுவது என தேவையில்லாத வேலைகளை செய்து சிறைக்குச் செல்லும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்திருக்கிறது. அங்குள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் வாகனம் முன்பு ரீல்ஸ் எடுத்த இளைஞரை கைது செய்திருக்கின்றனர் செல்வபுரம் காவல் துறையினர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பாகவும் மேலும் பலவேறு இடங்கள் முன்பு கெத்தாக நின்று ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புதல், இருகுழுக்கள் இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications