நான் துக்கடா அரசியல்வாதியா? கமலும் மநீம கட்சியும் மன்னிப்பு கேட்கணும் - வானதி சீனிவாசன் கொந்தளிப்பு
கோவை: எளிய குடும்பத்தில் இருந்து வந்து அரசியலில் உயர்ந்துள்ள தன்னை துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறுகின்றனர் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் அரசியல் களம் அனலடிக்கிறது. பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் வானதி சீனிவாசன். கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக முதன்முறையாக களம் காண்கிறார். வானதிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? என்று கமல்ஹாசனுக்கு சவால் விடுத்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் குமரவேல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் வானதியுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினரே போதும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மக்கள் நீதி மய்யம் அறிக்கை
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம். அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம்.

கமல் விவாதம்
முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக் கொள்ளலாம்.

நிராகரிக்கப்பட்டவர் வானதி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். ஏற்கனவே இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு கேள்வி
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தன்னை துக்கடா அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளது தொடர்பாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கமல்ஹாசனுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் பெண்கள் தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
|
பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், கடந்த பல ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன். இந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நான் கடந்த 5 ஆண்டுகாலமாக இந்த தொகுதியில் செய்துள்ள பணிகளை எனது சமூக வலைத்தள பக்கங்களைப் பார்த்தால் தெரியும். என்னைப்பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்வதா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எப்படி காப்பாற்றுவார்கள்
அரசியலில் உள்ள பெண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவதா? என்று கேட்டுள்ள வானதி, எளிய குடும்பத்து பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா எனவும் கேட்டுள்ளார். பெண்களுக்கு இவர்கள்கொடுக்கும் மரியாதை இதுதானா? எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் பெண்கள் அரசியலில் முன்னேறி வருகின்றனர். பெண்களை இவர்கள் இப்படித்தான் மதிக்கிறார்களா? பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா? என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியும், கமல்ஹாசனும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.