சினிமாவில் பாஜகவின் தலையீடு - தமிழ்நாட்டில் இறங்கியவுடன் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் முதல் கேள்வி
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு ஜனநாயகன் படம் வெளியிட தடை, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை ஆகியவை மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாடு வந்தவுடன் அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழ்நாடு வந்துள்ளார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக இன்று மாலை சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

பொங்கல் வாழ்த்து
மேலும் ஏராளமான பாஜக நிர்வாகிகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பளித்தனர். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் திருநாள் என்பது விவசாய பெருமக்கள் அறுவடை முடிந்து ஆனந்தமாக இல்லங்களில் மட்டுமல்லாமல் ஊரே கூடி மகிழ்ந்திருக்கும் ஓர் நிகழ்வு. இதில் எந்த பேதத்திற்கும் இடமில்லை.
சூரிய பகவானை வழிபடும் நாளாக அது அமைந்தாலும், இயற்கை தந்த வரங்களுக்கு எல்லாம் நன்றி செலுத்துகிற தமிழ் விழாவாக அமைந்துள்ளது. மேலும் பிற பகுதிகளில் வாழக்கூடிய விவசாயிகளுக்கு சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நொய்யல் ஆறை மீட்க வேண்டும் புதுப்பித்து எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.
சினிமாவுக்கு நோ கமென்ட்ஸ்
நொய்யல் ஆற்றை மீட்பது என்பது தஞ்சை விவசாய மக்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய பேராக அமையும்" என்றார். அவரிடம் சினிமாவிலும் மத்திய அரசு தணிக்கை வாரியம் மூலம் தலையீடு செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்தக் கேள்விக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
இதையடுத்து சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இருந்து திருப்பூர் கிளம்பி சென்றார். இன்று இரவு திருப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் தங்குகிறார். நாளை தன் வீட்டில் அவர் பொங்கல் விழா கொண்டாடுகிறார். அதன்பிறகு கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பொன் விழா
அதனை தொடர்ந்து ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். நாளை இரவு அவர் டெல்லி செல்கிறார். குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications