விண்ணை முட்டும் விலை உயர்வு.. இலங்கையில் ஒரே ஒரு முட்டையின் விலை ரூ 28.. தலைவிரித்தாடும் நெருக்கடி!
கொழும்பு: இலங்கையில் ஒரு முட்டையின் விலை ரூ 28 க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆப்பிளின் விலை ரூ 150 க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலகில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இது இலங்கையில் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை மக்கள் அவதியில் உள்ளார்கள்.
எரிப்பொருள், உணவு பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுடன் தினமும் 7 மணி நேர மின்வெட்டும் அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

சுற்றுலா துறை
சுற்றுலா துறை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்குள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அத்தியாவசியமற்றவை என்று 367 பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

பால் உற்பத்தி
இதில் பால், பால் உற்பத்தி பொருட்கள், பழங்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளதால் அங்காடிகளின் அடுக்குகளில் இருந்து அவை மறைந்துவிட்டன. இருக்கும் குறைந்த அளவிலான பொருட்களின் மக்களின் கைகளுக்கு கிடைக்காத வகையில் அதிக விலையுயர்வை சந்தித்து வருகிறது.

முட்டை விலை
ஒரு முட்டையின் விலை ரூ 28 க்கு விற்பனையாகிறது. ஆப்பிள் ஒன்று ரூ 150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த ஆப்பிளின் விலை ரூ 200 தொடும் என்கிறார்கள். பேரீச்சம் பழம் கிலோ ரூ 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால், கோதுமை மாவு, சர்க்கரை பருப்பு ஆகியவற்றின் விலைகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு ரூ 283 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 176 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் பலர் வாகனங்களை எடுக்காமல் பேருந்தை நம்பியுள்ளனர். டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதால் உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ 1.41 லட்சத்தை தொட்டுள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச விலையுயர்வாகும். டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ 260 ஆக சரிந்து விட்டது. இந்தியா, சீனா, உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் பெற்று நிலைமையை சமாளிக்க இலங்கை முயல்கிறது.












Click it and Unblock the Notifications