தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலைக்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு! கொழும்பில் இன்று பேச்சுவார்த்தை!
கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்வது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக் கூடாது என இலங்கை தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பது நடைமுறை. ஆனால் இலங்கை அரசோ, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்வது ,சுட்டுப் படுகொலை செய்வது, தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளது.

கொந்தளிப்பில் ராமேஸ்வரம்: அண்மையில் தமிழ்நாட்டு மீனவர்களை கொத்து கொத்தாக கைது செய்தது இலங்கை அரசு. இவர்களில் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதித்துள்ளது. இது தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
இலங்கையுடன் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இலங்கை அரசை தொடர்பு கொண்ட மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் அடுத்த கட்டமாக இலங்கை தலைநகர் கொழும்பில், இந்திய- இலங்கை அதிகாரிகளிடையே தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கொழும்பு பேச்சுவார்த்தை- இலங்கை விளக்கம்: இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேசுவதற்காக இந்திய தரப்பிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தரும் பதிலுக்காக காத்துள்ளோம். இதன் பின்னர் இரு நாட்டு மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கடல் தொழில் அமைச்சகம் சார்பில் முதலில் பேச்சுவார்த்தை நடைபெறும்; தேவைப்படும் நிலையில் வெளிவிவகாரத்துறையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அலி சப்ரி.
ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு: இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் கூறியதாவது: இலங்கைக்குள் நுழைந்ததால் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு 10 ஆண்டு சிறை: தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கைக்கு இந்திய மத்திய அரசு நெருக்கடி தந்து வருகிறது. இலங்கையில் உள்ள ஈழத் தமிழ் மீனவர்களின் கடல் வளங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் அழித்து வருகின்றனர். ஆகையால் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைகளில் இருந்து விடுதலை செய்யவே கூடாது. இதற்கு எதிராக இந்திய கடல் எல்லையில் ஈழத் தமிழ் மீனவர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாட்டு மீனவர்களுக்கான சிறை தண்டனையை 5 முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்த பின்னரே விடுதலை செய்ய வேண்டும். அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களை ஒருபோதும் விடுதலை செய்யவே கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications