டக்கென வீட்டுக்கே போன அமைச்சர்.. ‘போனை கொடுப்பா..’ - மாணவியின் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!
கடலூர் : கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்திற்குச் சென்று மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Recommended Video
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலினிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியின் தாயிடம் போனை கொடுக்கச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் அவரிடம் பேசினார்.
மாணவியின் தாய், தான் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று சந்தித்ததும், முதல்வர் ஸ்டாலின் போனில் பேசி, அவருக்கு உறுதியளித்துள்ள விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு போராட்டம் நடத்தியபோது போராட்டம் கலவரமாக மாறிய வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாமீன் கிடைக்குமா?
கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரும் ஜூலை 29ஆம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என மாணவியின் தாயார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த கிரைம் எண்ணுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வரை சந்திப்பேன்
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாய் செல்வி, தனது மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு, நேர்மையான முறையில் உண்மையை வெளியில் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

வீட்டுக்கே சென்ற அமைச்சர்
இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி மாணவியின் தாயாரை அவரது வீட்டுக்கே சென்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். மேலும், மாணவி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என மாணவியின் தாயாரிடம் உறுதியளித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்தச் சந்திப்பின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனும் உடனிருந்தார்.

முதல்வருடன் போனில் பேசிய மாணவியின் தாய்
அங்கிருந்தபடியே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியின் தாய் செல்வியிடம் போனை கொடுக்கச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications