ராஜதந்திரம்.. பிரதமர் மோடியுடன் கல்பாக்கம் நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்காதது இதனால் தான்.. திமுக பரபர!
கடலூர்: கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரம்பும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைக்கிறார். இந்த அணு மின் உற்பத்தியால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழகத்தை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என மதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கல்பாக்கம் ஈனுலை திறப்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் ரயில் மூலம் கிளம்பி மாலை தான் சென்னைக்கு வருகிறார். அவர், பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அணுமின் நிலைய ஈனுலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
கல்பாக்கம் அணு உலை திட்டம் ஆபத்தானது: கல்பாக்கம் அணு உலைத் திட்டம் ஆபத்தானது என்பதால் தான், அது தொடர்பான விழாவில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை. மக்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதால் தான் நாகரீகமாக இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்துப் பேசினால் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவார்கள். மோடி கோடி கோடியாக திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டியது போலவும், அதை திமுக தடுத்துவிட்டது என்பது போலவும் அண்ணாமலையும், பாஜகவினரும் பேசுவார்கள்.
ராஜதந்திரமாக தவிர்த்துள்ளார் ஸ்டாலின்: அதை தவிர்க்கும் வகையிலேயே, மிகவும் ராஜதந்திரமாக இந்த நிகழ்வை தவிர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அது மத்திய அரசின் வேலை, அதில் தலையிட வேண்டாம் என விலகியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக கல்பாக்கம் ஈனுலை திட்டம். குஜராத்திலோ, உத்தர பிரதேசத்திலோ ஏன் ஈனுலை திட்டத்தை கொண்டு வரவில்லை? எல்லா வகையிலும் தமிழ்நாட்டை நாசப்படுத்தும் வேலையை தான் பாஜக செய்கிறது.
கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பார்வையிடும் ஈனுலை திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையைப் போல் மக்களை பாதிக்கும் எந்த திட்டமானாலும் திமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தி நிறுத்தும். ஸ்டெர்லைட் ஆலையை நிறுத்தியது போல் கல்பாக்கம் ஈனுலைத் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்கள் ஏற்காத எதையும் நாங்கள் செயல்படுத்த விட மாட்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications